பக்கத்தான் ஹரப்பான் மார்ச் மாத இடைத் தேர்தலில் செமினி சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு சூத்திரம் உரைக்கிறார் முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம்.
“ஒரு டோல் சாவடியை மூடுங்கள், எரிபொருள் விலையைக் குறையுங்கள்.
“2018 மே மாதத்துக்கு முன்பு பெல்டாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். செமினியில் வெற்றி உறுதி”, என்று நெகிரி செம்பிலான் பெர்சத்துத் தலைவர் நேற்றிரவு டிவிட் செய்திருந்தார்.
கடந்த சனிக்கிழமை கேமரன் மலை இடைத் தேர்தலில் ஹரப்பான் பிஎன்னிடம் தோற்றதை அடுத்து ரயிஸ் இப்படி ஒரு யோசனையை முன்வைத்தார்.
அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலிருந்தால் அது மக்களுக்குப் பிடிக்காது என்கிறார் ரயிஸ்.
“வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறினால் மக்களுக்குப் பிடிக்காது. கேமரன் மலையில் தோற்றது ஏன் என்பதை ஹரப்பான் தலைமைத்துவம் நிச்சயம் அறிந்திருக்கும்”, என்றவர் டிவிட்டரில் கூறி இருந்தார்.
ஜனவரி 11-இல், சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகம்மட் நோர் இறந்ததால் காலியான செமினியில் மார்ச் 2-இல் இடைத் தேர்தல்.