B40 குழுவினர் சொந்த வீடு பெற, பேங்க் நெகாரா RM1 பில்லியன் நிதி ஒதுக்கீடு

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினர் (B40), தங்கள் முதல் வீட்டிற்குக் கடன் பெற உதவும் வகையில், பேங்க் நெகாரா (பிஎன்எம்) RM1 பில்லியன் நிதி உதவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘பிஎன்எம் கட்டுப்படி விலை வீடு நிதி’யின் கீழ், மாத குடும்ப வருமானம் RM2,300 அல்லது அதற்கும் குறைவாக பெறுபவர்கள், RM150,000 அல்லது அதற்கும் குறைந்த விலையிலான முதல் வீட்டுக்கு, ஆண்டுக்கு 3.5 விழுக்காடு நிதி விகிதத்துடன் கடன் பெற தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.

எம்பேங்க், பிஎஸ்என், சிஐஎம்பி, மேய்பெங்க் மற்றும் ஆர்எச்பி ஆகிய 5 வங்கிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன.

“வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதற்கு வாங்குவோர் இல்லாதது காரணமல்ல, மாறாக, அவர்கள் கடன் பெறுவது கடினமாக இருப்பதுதான் காரணம். ஆக, இன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் வழி, இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு பிறக்கும் என நம்புகிறேன்,” என நிதியமைச்சர் லிம் குவான் எங், இன்று பேங்க் நெகாரா வளாகத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையே, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்ற அமைச்சர், ஜுரைடா கமாருட்டின், RM150,000 அல்லது அதற்கும் குறைந்த விலையிலான வீடுகள் நாட்டின் சிறு நகரங்களில் இருப்பதாகக் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின், நிதி ஆதாரங்களை அதிகரிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என பேங்க் நெகாரா ஆளுநர் சம்சியா யூனுஸ் தெரிவித்தார்.