மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), சிலாங்கூர், செமிஞ்சே இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை, இவ்வார இறுதியில், கட்சியின் மத்தியச் செயலவை கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“போட்டியிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது,” எனக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன், மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் அங்குப் போட்டியிட்ட அருட்செல்வன், தொகுதி வரையறைக்கு முன்னர், செமிஞ்சேயில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருந்ததை வலியுறுத்தினார்.
செமிஞ்சே வட்டார மக்களுக்கு, பிஎஸ்எம் அதிக பணிகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.
“கேமரன் மலையில் (அதிக பணிகளை செய்தபோதும்) நாங்கள் போட்டியிடாததற்கு நிறைய பேர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்,” என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில அரசு எதிர்நோக்கும் பிரச்சனைகளை முன்வைக்க, இந்த மார்ச் 2 இடைத்தேர்தல் ஒரு நல்ல தளமாக அமையுமென்றும் அருட்செல்வன் தெரிவித்தார்.
செமிஞ்சே இடைத்தேர்தலில், பிஎஸ்எம்-இன் வேட்பாளர் அவர்தானா என்று கேட்டதற்கு, “அது நிச்சயமல்ல, வேறொருவர்கூட போட்டியிடலாம்,” என்றார் அவர்.