கேமரன் மலை வீழ்ச்சிக்குப் பின்னர், செமிஞ்சேயில் ஹராப்பான் மீண்டெழ வாய்ப்புண்டா?

இன்னும் ஒரு மாத காலத்தில், பக்காத்தான் ஹராப்பான் செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) 8,964 பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற போதிலும், தற்போதைய அரசியல் மாற்றங்களை ஹராப்பான் தெரிந்து கொள்ள வேண்டும், தனது போட்டியாளர்களான, பிஎன் மற்றும் பாஸ் தரப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது.

கடந்த சனிக்கிழமை, கேமரன் இடைத்தேர்தலில், எதிரிகளாக இருந்த பிஎன் மற்றும் பாஸ் ஆகியவை நெருங்கிய நண்பர்களாக மாறி, பாஸ் கட்சியின் ஒத்துழைப்போடு, மலாய் பெரும்பான்மை வாக்குகளை பிஎன் கைப்பற்றியது.

ஜிஇ14-ல், பிஎன் மற்றும் பாஸ் பெற்ற வாக்குகளைக் கணக்கிலெடுத்தால், 1,998 வாக்குகள் ஹராப்பானுக்குக் கூடுதலாகவே உள்ளது. பிஎன்-னும் பாஸ்-உம் கடந்த பொதுத் தேர்தலில் தனிதனியே போட்டியிட்டன. இரண்டாவது நிலையில் பிஎன் –னும் மூன்றாவது நிலையில் பாஸ்-உம் வந்தன.

கேமரன் மலை வாக்குப் பதிவில், ஹராப்பானுக்கான மலாய்க்காரர்களின் ஆதரவு இன்னும் பாதிப்படையவில்லை, மாறாக சற்று கூடியுள்ளது.

மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள்

செமிஞ்சே தொகுதியில், மலாய் வாக்காளர்கள் 67 விழுக்காடு, சீன வாக்காளர்கள் 17 விழுக்காடு, இந்திய வாக்காளர்கள் 14 விழுக்காடு ஆகும்

இருப்பினும், கேமரன் மலை வெற்றி பிஎன்-க்கு ஒரு புதிய ஆற்றலாக காணப்படுவது மறுக்க முடியாதது, இந்த வேகத்தினால் தற்போதுள்ள ஹராப்பான் ஆதரவாளர்களை அக்கூட்டணி திருடும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது.

கேமரன் மலையில், வாழ்க்கைச் செலவினங்களின் உயர்வு, ஹராப்பானின் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகமது காசிம் மரணம் ஆகியவற்றைச் சுற்றி பிஎன் பிரச்சாரம் அமைந்தது.

பக்காத்தான் ஹராப்பானால், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியவில்லை என்றால், அம்னோ மற்றும் பாஸ் ஆகியவற்றின் இந்தப் பிரச்சாரம், மலாய்க்காரர்களின் மனதை, – அது நகர்ப்புறமோ அல்லது புறநகர் பகுதியோ – நிச்சயம் கவர்ந்திழுக்கும் என சிலாங்கூர் மாநில அரசின் ஆராய்ச்சி மையமான, இன்ஸ்திதியூட் டாருல் ஏஹ்சான் எச்சரித்துள்ளது.

இதற்கிடையில், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள், செமிஞ்சே இடைத்தேர்தலில் வாக்களிப்பதை ஹராப்பான் உறுதிபடுத்த வேண்டும்.

கேமரன் இடைத்தேர்தலில், சீன மற்றும் இந்திய வாக்காளர்கள் அதிகம் வசித்த பகுதிகளில், வாக்குப்பதிவு 68.79 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது.

அதேவேளை, மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கை 70.46 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.

ஹராப்பான் மற்றும் பிஎன் தவிர்த்து, மலேசிய சோசலிசக் கட்சியிலிருந்து, எஸ் அருட்செல்வன், மீண்டும் அந்தச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் நஜிப், கேமரன் மலையைப் போல், செமிஞ்சே இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் களமிறங்குவாரா எனத் தெரியவில்லை.

செமிஞ்சே இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல், எதிர்வரும் பிப்ரவரி 16-ம் நாள் நடைபெறவுள்ளது.