கையாடல் செய்யப்பட்ட 1எம்டிபி பணத்தை, மலேசியா விரைவில் திரும்பப் பெறக்கூடும் என்று நிதியமைச்சர் லிம் குவான் ஏங் தெரிவித்தார்.
“அது பில்லியன் கணக்கான தொகை அல்ல, ஆனால் முதல் கட்டமாக, குறிப்பிட்ட ஒரு தொகை மலேசியாவிற்குக் கொடுக்கப்படும், இது ஒரு நல்ல செய்தி. அதனைத் தொடர்ந்து, மீதப் பணமும் செலுத்தப்படும் என எதிர்பார்ப்போம்,” என இன்று புத்ராஜெயாவில், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.
இருப்பினும், அப்பணம் எங்கிருந்து வரும், அதன் மொத்த தொகை என்ன என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
1எம்டிபி நிதியிலிருந்து, ‘நூற்றுக்கணக்கான மில்லியன்’ பணத்தைப் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களும், அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.
2018 ஜூலையில், 1எம்டிபி நிதியிலிருந்து, 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM14.2 பில்லியன்) மலேசியா மீட்டெடுக்கும் சாத்தியம் உள்ளதாக லிம் தெரிவித்தார். இது 12.3 பில்லியன் அமெரிக்க டாலரில், இது 30 விழுக்காடு ஆகும்.
எதிர்க்கட்சியினர் அப்பணத்தைத் திருப்பிக்கொடுக்க தவறினால், அரசாங்கம் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் சொன்னார்.