குற்றவியல் தடுப்புச் சட்டம் (போக்கா) 1959-இன் கீழ், விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து சிறுவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்பு, சுவாராம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்றப் பதில்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, 2018 வரை, அந்த 142 போக்கா கைதிகளில் பலர் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று சுவாராம் நிர்வாக இயக்குநர், டி சிவன் கூறினார்.
“முந்தைய அரசாங்கம் போக்கா மற்றும் சோஸ்மா (பாதுகாப்பு குற்றச் சட்டங்கள் [சிறப்பு நடவடிக்கைகள்]) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியபோது, அது தீவிரக் குற்றவாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்தது. இதில், 16 , 17 வயது கொண்ட இளையர்கள், எந்த அளவுக்குத் தீவிரமானக் குற்றங்களில் ஈடுபட்டிருப்பர்?
“அவர்கள் கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டால், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து போகட்டும். அதைவிடுத்து, போக்காவைப் பயன்படுத்த வேண்டாம்.
“[…] போக்கா சட்டத்தைக் குழந்தைகள் மீது பயன்படுத்த முடியாது. புதிய அரசாங்கம் இதில் முழுமையான அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும், அவர்களுக்கு ஏற்ற நஸ்டஈடும் கொடுக்கப்பட வேண்டும்,” என்று கோலாலம்பூர், சுஹாகாம் தலைமையகத்தில், இன்று காலை ஒரு செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.