பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா இன்று, பாரம்பரிய சடங்குகளுடன் மாட்சிமை தங்கிய மாமன்னராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
அதே சடங்கில் பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவும் துணைப் பேரரசராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அவ்விருவரையும் பேரரசராகவும் துணைப் பேரரசராகவும் ஜனவரி 24-இல் கூடிய 2510வது (சிறப்பு) ஆட்சியாளர் கூட்டம் தேர்ந்தெடுத்தது. ஐந்தாண்டுகள் அவர்கள் அப்பதவிகளில் வீற்றிருப்பர்.
உலகில் அரசமைப்புப் படியான மன்னர்களைக் கொண்ட 43 நாடுகளில் மலேசியாவும் ஒன்று. ஆனால், ஒன்பது மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர் மன்னராக சுழல்முறையில் தேர்ந்தெடுக்கப்படுவது உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று.
சுல்தான் அப்துல்லாவும், சுல்தான் நஸ்ரினும், மற்ற மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் மலாக்கா, பினாங்கு, சாபா, சரவாக் ஆளுநர்கள், அரசாங்கத் தலைவர்கள், நீதிபதிகள், நாட்டின் பெருமக்கள் ஆகியோர் முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் பதவிப் பிரகடன ஆவணங்களிலும் கையெழுத்திட்டனர்.