மூத்த செய்தியாளர்: வாங் கெலியான் சவக்குழிகளை அம்பலப்படுத்தியது நான், போலீஸ் அல்ல

பெர்லிஸ் காட்டுப் பகுதிகளில் பலர் புதைக்கப்பட்டிருந்த சவக்குழிகளை முதன்முதலாக அம்பலப்படுத்தியது போலீஸ் என்று கூறப்படுவதைக் கேட்டு ஆத்திரமடைகிறார் இப்போது நின்றுபோன ஓர் ஆங்கில நாளிதழின் செய்தியாளர்.

அச் செய்தியை வெளியில் கொண்டு வந்த பெருமைக்கு இன்னொரு ஆங்கில நாளேடும் உரிமை கொண்டாடுவது அவருக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

“எத்தனையோ அபாயங்களையும் வலிகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அன்னிய தொழிலாளர்களுக்கு நேர்ந்த அநீதிகளையும் அவலத்தையும் வெளிச்சம் போட்டுக் காண்பித்ததற்காக” மலாய் மெயிலுக்கோ அதன் படப்பிடிப்பாளர் சயுதி சைனுடினுக்கோ தனக்கோ செய்தி நிறுவனங்கள் உரிய அங்கீகாரம் அளித்ததில்லை, பாராட்டியதுமில்லை, இது ஏனென்று புரியவில்லை என முன்னாள் மலாய் மெயில் செய்தியாளர் அருள்தாஸ் கூறினார்.

பினாங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அருள்தாஸ் “தவற்றைச் சரிசெய்து உள்ளதை உள்ளபடி” தெரிவிக்க வேண்டும், அதுதான் தன்னுடைய நோக்கம் என்றார்.

தன்னுடைய முதலாவது கட்டுரை “குடியேறிகளின் ‘சிறை முகாம்’ கண்டுபிடிப்பு” என்ற தலைப்பில் 2015 மே 16-இல் வெளிவந்தது என்றாரவர். 2014 -இலேயே அவர் அவ்விவகாரத்தைக் கண்டறியும் முயற்சியைத் தொடங்கி விட்டார்.

“கெடா, ஜித்ராவில் ஒரு காப்பிக்கடையில் இருந்தபோது ஒருவர் வந்து சவக்குழிகள் பற்றித் தகவல் அளித்தார். அது தொடக்கம் குற்றம் நிகழ்ந்த இடத்துக்கு அடிக்கடி சென்று வந்தேன்”, என்று அருள்தாஸ் கூறினார்.

தன் அனுபவங்களை நூலாகத் தொகுத்திருப்பதாகவும் விரைவில் நூல் வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார்.

அவ்விவகாரத்தை அம்பலப்படுத்தியதைப் பாராட்டி சுஹாகாம் 2015-இல் அவருக்கு ஒரு விருது வழங்கியது. 2016-இல் மலேசிய பத்திரிகையாளர் கழகமும்(எம்பிஐ) அவரைப் பாராட்டி விருதளித்தது.

அண்மையில் பெர்னாமா செய்தி ஒன்று, வாங் கெலியான் சவக்குழிகள் விவகாரம்மீது அரசாங்கம் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்போவதாகக் கூறியதுடன் 2016 மே மாதம் அச்சவக்குழிகள் குறித்து “போலீஸ்தான் முதலில் அறிவித்தது” என்று குறிப்பிட்டதுதான் இந்த எதிர்வினைக்குக் காரணம் என்றும் அருள்தாஸ் கூறினார்.

ஆர்சிஐ-இல் சாட்சியமளிக்க தயார் என்றும் அவர் சொன்னார்.

“சயுதியும் நானும் பல துன்பங்களுக்கு ஆளாகி, உயிரைப் பணயம் வைத்து சவக்குழி விவகாரத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்தோம் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்”, என்றாரவர்.