நஜிப்: நான் இறங்கிவிட்டேன், ஆனால் ரிங்கிட் இன்னும் கொடூரமாக இறங்கிவிட்டது

தான் பிரதமர் பதவியிலிருந்து விலகினால், ரிங்கிட்டின் மதிப்பு உயரும் என்ற பக்காத்தான் ஹராப்பானின் முந்தையக் குற்றச்சாட்டு குறித்து, நஜிப் ரசாக் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நான் இறங்கிவிட்டேன், (லிம்) குவான் எங் ஏறிவிட்டார். ஆனால், ரிங்கிட்டின் மதிப்பு கொடூரமாக இறங்கிவிட்டது. இதற்கு குவான் எங்-கின் பதில் என்ன?” என்று தனது முகநூல் பக்கத்தில் நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹராப்பான் கூட்டணி மத்திய அரசை கைப்பற்றிய பிறகு, நஜிப்பிற்குப் பதிலாக, நிதி அமைச்சராக பதவியேற்ற லிம் அவரை அடிக்கடி விமர்சித்து வந்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், உலக எண்ணெய் விலை 80 விழுக்காடு குறைந்த போது, தாய்லாந்து வர்த்தகர்கள் ரிங்கிட்டை ஏற்க மறுக்கிறார்கள் என்று ஹராப்பான், பிஎன் அரசாங்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.

இருப்பினும், 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தாய்லாந்து நாணயமான பாஹ்ட்-க்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு கூடியது, ஆனால் அதன்பின்னர் மீண்டும் அது குறைந்தது.

நேற்று, ரிங்கிட்டின் மதிப்பு, 100 பாஹ்ட்டுக்கு RM13.15-ஆக பதிவு செய்யப்பட்டது. இது மோசமான ஒரு நிலை என்று நஜிப் சொன்னார்.

“அதுவும், உலக எண்ணெய் விலைகள், மூன்று ஆண்டுகளுக்கு முன்புடன் ஒப்பிடும்போது, 2 1/2 மடங்கு (விலை) மீட்கப்பட்டுள்ள இந்த நேரத்தில்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.