களத்தில் இறங்கி வேலை செய்வதைப் பற்றி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் இருந்து, பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
அண்மையில், குறிப்பாக, கேமரன் மலை இடைத் தேர்தலின் போது, கீழ்மட்டத் தலைவர்கள், உள்ளூர் சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து உரையாடிய அவரின் அணுகுமுறையை அம்பிகா குறிப்பிட்டுப் பேசினார்.
“அது ஒரு சிறந்த திறமை, அவரின் (நஜிப்) அணுகுமுறை … அவர் வெறுமனே கிடக்கவில்லை, ஒரு மூலையில் ஒளிந்து கொள்ளவில்லை.
“ஒரு கூட்டணியாக முன்னேறுவதற்கு, அடிமட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளில் இதுவும் ஒன்றாகும். அவர்கள் (ஹராப்பான்) இதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்,” என்று அம்பிகா கூறியதாக மலாய் மெயில் செய்தி தெரிவித்துள்ளது.
கேமரன் இடைத்தேர்தலில், பூர்வக்குடிகள் கிராமங்களில் இறங்கி, தீவிரப் பிரச்சாரத்தில் நஜிப் ஈடுபட்டார்.
அதுமட்டுமின்றி, சமீபத்தில், சிலாங்கூர் ஷா ஆலமில், ‘மாலு அப்பா போஸ்கூ’ (என்ன வெட்கம் தலைவரே) என்று ஒரு நிகழ்ச்சியில், பொதுமக்களைச் சந்தித்து நஜிப் உரையாடினார்.
பின் –னும் அம்னோவும் இன்னும் குழப்ப நிலையில் இருக்கும் போதே, ஹராப்பான் நாட்டை வழிநடத்துவதில் தனது செயல்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அம்பிகா சொன்னார்.
“ஹராப்பான் அனைவருக்குமான ஓர் அரசாங்கமாக செயல்பட்டால், அவர்கள் தங்களது செயல்பாடுகளை மாற்றலாம்…
“நாட்டை இந்த தடத்தில் வழிநடத்த நாங்கள் விரும்பவில்லை என்று கூற யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்கள். முன்பு, எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஹராப்பான் மிகத் தீவிரமாக இதை விமர்சித்து வந்துள்ளது,” என்றார் அவர்.
“அவர்கள் அதனைச் செய்தால், இன்னும் பலமான கூட்டணியாக வருவார்கள். அதற்கான முன்னெடுப்புகள் இருக்கின்றன, ஆனால் சில காரணங்களால் அவை தாமதமாகின்றன என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
நஜிப்புக்கு கிடைத்துவரும் வரவேற்பு, அம்பிகா வறுத்தம்
நஜிப்பிடம் இருந்து கற்றுக் கொள்ளுமாறு ஹராப்பானைக் கேட்டுக் கொண்ட போதிலும், 42 ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோக வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் அந்த முன்னாள் பிரதமருக்குக் கிடைத்துவரும் வரவேற்பு குறித்து அம்பிகா கவலை தெரிவித்தார்.
அத்தகையக் குற்றச்சாட்டுகளோடு, அரசியலில் தொடர்ந்து இருக்க அவர் எடுக்கும் முயற்சிகள், வேறு நாடுகளில் என்றால், நிச்சயம் பலனளிக்காது என்றும் அம்பிகா தெரிவித்தார்.
“கண்டிப்பாக, அவருக்கு (நஜிப்) தான் விரும்புவதைச் செய்ய உரிமையுண்டு, ஆனால் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருவதுதான் மிகவும் வறுத்தமாக இருக்கிறது.
“இதுவே வேறு நாடு என்றால், இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் ஒருவருக்கு, இவ்வளவு வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமே,” என்றார் அம்பிகா.