துரோனோ விவசாயிகளை வெளியேற்றிட மீண்டும் நீதிமன்ற நடவடிக்கை, விவசாயிகள் அதிர்ச்சி 

பேராக், துரோனொவில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயம், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் 8 விவசாயிகளைக் கட்டாயமாக வெளியேற்றிட, பேராக் மேம்பாட்டு வாரியம், வழக்கறிஞர்கள் வாயிலாக சம்மன் அனுப்பியுள்ளது.

பேராக் பக்காத்தான் ஹராப்பான் அரசின் கீழ் இயங்கிவரும் ‘பேராக் மேம்பாட்டு வாரியம்’ அனுப்பிய சம்மனைக் கேள்விப்பட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சட்டப்பிரிவின் தலைவரான வழக்குரைஞர் குணசேகரன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம், மாநில மந்திரி பெசார், இப்பிரச்சனையில் தலையிட்டு, சுமூகமாகத் தீர்வுகாண வேண்டுமென, வழக்குரைஞர் குணசேகரன் தலைமையில் மகஜர் ஒன்றினை மந்திரி பெசார் அலுவலகத்தில் அவர்கள் சமர்பித்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு, அந்த நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் அவர்களை வெளியேற்றிட, முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம், ஈப்போ உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது.

2016, டிசம்பர் 15-ல், அவ்வழக்கில் தோல்வி கண்ட இந்த விவசாயிகள், மனந்தளராமல் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர், வழக்குரைஞர் அம்பிகாவின் உதவியோடு  மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு வருவதற்கு முன்னரே, கடந்த 14-வது பொதுத் தேர்தலில்,  பேராக் மாநில அரசு ஹராப்பான் கைவசம் மாறியதால், அம்பிகாவின் ஆலோசனையின் பேரில், விவசாயிகள் தன் உதவியோடு, புதிய மந்திரி பேசாருக்குக் கடிதங்கள் அனுப்பியதாக குணசேகரன் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பேராக் மந்திரி பெசார் அலுவலகம், கடந்தாண்டு ஜூலை 9-ம் தேதி, கோலாலம்பூரில்  ஒரு பேச்சுவார்த்தையினை ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

வழக்குரைஞர் குணசேகரன்

அப்பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் சார்பாக தானும் வழக்குரைஞர் அம்பிகா மற்றும் சுங்கை சிப்புட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் ஆகியோரோடு, மாநில மந்திரி பெசார், பேராக் மந்திரி பெசார் மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் மற்றும் அதன் வழக்கறிஞர்கள் ஆகியோரும் கலந்துகொண்டதாக குணசேகரன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் இறுதியில், இப்பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமான முறையில் தீர்ப்பதற்கான பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு, அதற்கு இணக்கம் கண்டதால், நீதிமன்ற வழக்காடல் இரண்டுமுறை ஒத்தி வைக்கப்பட்டதாகவும் குணசேகரன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் விவசாயிகள் பல முயற்சிகள் செய்தும், பிரச்சனையைக் களைவதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாததால், 2018, நவம்பர் 14-ம் தேதி, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், விவசாயிகளின் மேல்முறையீட்டில் அடிப்படை சாராம்சம்  இருப்பதாகக் கூறிய புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம், விவசாயிகளின் மனுவை ஏற்றுக்கொண்டதோடு, வழக்கை செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது. இத்தீர்பினைத் தாம் உனடியாக பேராக் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரிக்குத் தெரிவித்ததாகவும் குணசேகரன் சொன்னார்.

புதிய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பிற்கு,  பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் விவசாயிகளுக்கு, பேராக்  மந்திரி பெசார் மேம்பாட்டு வாரியம், மீண்டும் நீதிமன்ற சம்மன் அனுப்பியது நியாயமா என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாநில மந்திரி பேசார் இப்பிரச்சனையில் தலையிட்டு, தீர்வுகாண காண வேண்டுமென, மூன்று அம்ச கோரிக்கையினை முன்வைத்து, அவர்கள் மகஜர் அனுப்பியுள்ளனர். அவை :-

  1. விவசாயிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கையை, மாநில மந்திரி பேசார் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
  2. பேச்சுவார்த்தைக்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.
  3. விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதோடு, எந்தவொரு கட்டாய வெளியேற்றல் நடவடிக்கையையும் கைவிட வேண்டும்.

மாநில மந்திரி பெசார் சார்பில், விவசாயிகளின் மகஜரைப் பேராக் மாநில சிறப்பு ஆய்வாளர் மேஜர் கமாருடின் பெற்றுக்கொண்டதோடு, இவ்விவகாரத்தை மந்திரி பெசாரின் பார்வைக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தாகவும் குணசேகரன் கூறினார்.