அரசு பள்ளிகளில் பணியில் இருந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பணி நீக்கம், கல்வி அமைச்சு தலையிட வேண்டும்

ஜனவரி மாதத் தொடக்கத்தில், எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி, பள்ளிகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருந்த பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தது தொடர்பில், அவர்களுக்கு மலேசியக் கல்வி அமைச்சு உதவ வேண்டுமென, அரசு சாரா நிறுவனமான, அரசு ஒப்பந்த தொழிலாளர் கூட்டணி (ஜேபிகேகே) கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டது.

 

புதிய குத்தகையாளருக்கு, அவ்விரு குத்தகையும் வழங்கப்பட்ட பின்னர், நாடு முழுவதிலும் இருந்து, சுமார் 10,000 பள்ளிகளில் வேலை செய்துவந்த ஆயிரக்கணக்கான குத்தகை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக, அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆர் மோகனராணி தெரிவித்தார்.

அப்பணியாளர்கள் தங்களின் மாத வருமானத்தை இழந்து, கடந்த ஒரு மாதமாக சிரமத்தை எதிர்நோக்கி வருவதால், கல்வி அமைச்சு இப்பிரச்சனையில் தலையிட்டு, உடனடி தீர்வுகாண வேண்டுமென ஜேபிகேகே கேட்டுக்கொள்வதாக அவர் சொன்னார்.

“கல்வி அமைச்சு இப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டதால், தங்களுக்குப் பணியாளர்களைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை என புதிய குத்தகையாளர் கூறுகிறார். அதனால், முன் அறிவிப்பின்றி, அவர்களைப் பணி நீக்கம் செய்துள்ளார்.

“பாதுகாவலர்களுக்கு, முன்பிருந்தது போல் 2 ஷிப்ட் அல்லாமல், இப்போது 3 ஷிப்டுகளாக வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால், வேலை நேரம் குறைந்துள்ளதோடு, அவர்கள் கூடுதல் நேரச் சம்பளத்தையும் (ஓட்டி) கேட்கமுடியாமல் போகிறது,” என்று, கல்வி அமைச்சின் கொள்முதல் மற்றும் சொத்து மேலாண்மைப் பிரிவு இயக்குநரைச் சந்திக்கும் முன்னர், செய்தியாளர்களிடம் ராணி சொன்னார்.

பாதிக்கப்பட்ட குத்தகை துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் 12 பேர் அவருடன் வந்திருந்தனர்.

முன்னதாக, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கட்டுப்பாட்டு சேவைகளுக்காக, பள்ளிகளில் பணியமர்த்தப்படும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த தொழிலாளர்களின் பணியமர்த்தல், பணி நீக்கம் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை போன்றவை, நியமிக்கப்பட்ட நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் கல்வி அமைச்சு அவ்வறிக்கையில் கூறியுள்ளது.