டாக்டர் மகாதிர் முகமட் பிரதமராக இருக்கும் வரை மட்டுமே, பக்காத்தான் ஹராப்பான் உயிர்வாழ முடியும் என்று, மஇகா தேசியத் தலைவர் எஸ் விக்னேஸ்வரன் கணித்துள்ளார்.
“மகாதிர் பதவியிலிருந்து விலகினால், ஹராப்பானால் செயல்பட முடியாது,” என்று நேற்றிரவு, கோலாலம்பூர், மெனாரா மாணிக்கவாசகத்தில் நடந்த மஇகா மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
14-வது பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ14) முன்னர், பிஎன் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து இறக்கினால், மகாதீரைப் பிரதமர் பதவிக்கு நியமிக்க வேண்டும் எனும் புரிந்துணர்வில் ஹராப்பான் கூட்டணி செயல்பட்டது.
அதற்கு முன்னர், அப்பதவிக்கு முன்மொழியப்பட்டவர் அன்வார் இப்ராஹிம். இரண்டு ஆண்டுகளில், அன்வாருக்கு வழிவிட்டு பிரதமர் பதவியிலிருந்து விலகிவிடுவதாக மகாதீர் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, எதிர்வரும் மார்ச் 2-ம் தேதி, செமிஞ்சே இடைத்தேர்தலை எதிர்கொள்ள, மஇகாவுக்கு எந்தவொரு புதிய மூலோபாயமும் இல்லை என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த 9 மாதங்களில், ஹராப்பான் அரசாங்கத்திடம் கண்ட பலவீனங்களைச் செமிஞ்சே வாக்காளர்களுக்கு எடுத்து சொல்லி, அவர்களை எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.
“ஹராப்பானை வசைப்பாடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை,” என்று மேலவை சபா நாயகருமான அவர் சிரித்துகொண்டே சொன்னார்.
“முன்பு அவர்கள் (ஹராப்பான்), இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று, எங்களை ஏசினார்கள், இப்போது அதை நாங்கள் செய்கிறோம்,” என்று அவர் மேலும் சொன்னார்.
கட்சியின் துணைத் தலைவர், எம். சரவணன், செமிஞ்சே இடைத்தேர்தலில் மஇகாவின் மூலோபாய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“அங்குப் பிரச்சாரம் செய்ய, தகுதி வாய்ந்த கட்சி உறுப்பினர்களையும் நாங்கள் அடையாளங்கண்டு வருகிறோம். குறிப்பாக, மெண்டரின் மொழி தெரிந்தவர்களை நாங்கள் தேடுகிறோம்,” என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.