நஜிப் இன்னும் வெளியில் இருப்பது ஏன் என்று பலரும் கேட்கிறார்களாம்

பிரதமர்துறை துணை அமைச்சர் ஹனிபா மைடின், 1எம்டிபி-இல் பில்லியன் கணக்கில் சுருட்டியதாகக் குற்றஞ்சாட்டப்படுள்ள நஜிப் அப்துல் ரசாக் இன்னும் கம்பி எண்ணாமல் வெளியில் சுற்றித் திரிவது ஏன் என்று பலரும் கேட்பதாகக் கூறினார்.

“என்னிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி முன்னாள் பிரதமரை இன்னும் சிறைக்குள் அனுப்பாதது ஏன் என்பதுதான். அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார், இடைத் தேர்தல் பரப்புரைக்கும் செல்கிறார் என்றெல்லாம் பேசுகிறார்கள்”, என்றாரவர்.

அது நியாயமான கேள்விதான். ஆனால், மக்கள் சட்டம் செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

“முன்னாள் பிரதமர்மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும் முதலில் அவற்றை நிரூபிக்க வேண்டும்.”, என்றாரவர்.

பிணையில் விடுவிக்கத்தக்க குற்றங்களையே நஜிப் செய்திருக்கிறார். அதுதான் பிணைப்பணம் கட்டியதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

பக்கத்தான் ஹரப்பான் அரசு சட்ட ஆளுமையை பின்பற்றும் ஒரு அரசு.

“அதனால்தான், எதிரிகளாக இருந்தாலும் குற்றம் நிருப்பிக்கப்படாதவரை அவர்கள் நிரபராதிகளே என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என்று ஹனிபா கூறினார்.