தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் அதன் வாசகர்களை அவமதித்ததாக, குற்றம் சாட்டப்பட்ட ஓர் உள்ளூர் தமிழ் வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர், அதற்கு மன்னிப்பு கோரினார்.
தி.எச்.ஆர். ராகா அறிவிப்பாளர் ஜி உதயக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத ஓர் அழைப்பாளருக்கு இடையேயான உரையாடலின் ஆடியோ பதிவு, மூன்று நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் கசிந்து, சமூக வலைத்தளங்களில் பரவியது.
தமிழ்ப் பத்திரிக்கை செய்தியாளர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து வந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, உதயா மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
“அது வானொலியில் ஒலிபரப்பப்படாத உரையாடல், அதை அந்த அடையாளம் தெரியாத அழைப்பாளர், என் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க, வேண்டுமென்றே அதனை வெளியிட்டுவிட்டார்.
“இருப்பினும் அதற்கு முழுப் பொறுப்பேற்று, தமிழ்ப் பத்திரிக்கை செய்தியாளர்கள் மற்றும் வாசகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,” என்று உதயா தெரிவித்தார்.
அந்தப் பதிவில், பெரிய அளவில் இருக்கும் தமிழ்ச் செய்தித்தாள், “பொருள்களை மடிக்கும் காகிதங்களாகவும் படுத்து உறங்குவதற்காக” மட்டுமே பயனுள்ளதாக இருப்பதாக அந்த அழைப்பாளர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளிடம் பணம் பெறுவதற்காக அவர்களைப் புகழ்ந்து பேசுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் அந்த அழைப்பாளர் கூறினார்.
தமிழ்ச் செய்தித்தாள்களில் வெளிவரும் கட்டுரைகள் பழையதாக இருக்கின்றன என்று தெரிவித்த அந்த நபர், அத்தகைய செய்தி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என்றும் மேலும் கூறினார்.
அந்நபரின் கூற்றுகளை ஆமோதிப்பது போல, உதயா சிரிந்துகொண்டு செவிமடுத்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இது, தமிழ் நேசன் நாளிதழ் மூடப்பட்டதன் தொடர்பான கருத்தாடல் என்று நம்பப்படுகிறது. ஆயினும், அது வானொலியில் ஒலிபரப்பப்படவில்லை.
இதற்கிடையே, உதயாவை, அஸ்ட்ரோவுக்குச் சொந்தமான ராகாவில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டுமென சில என்.ஜி.ஓ. (அரசு சாரா நிறுவனங்கள்) குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
14 நாட்களுக்குள் உதயாவை வேலையிலிருந்து நீக்காவிட்டால், அஸ்ட்ரோ தலைமையகத்தில், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒரு குழு மக்கள் ஓசை பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளது.
மலேசியாகினி டி.எச்.ஆர். ராகா மற்றும் அஸ்ட்ரோவின் கருத்துக்களைக் கேட்க அவர்களைத் தொடர்புகொண்டுள்ளது.