செமிஞ்சே இடைத்தேர்தல் : பி.எஸ்.எம். வேட்பாளராக நிக் அஜிஸ்?

எதிர்வரும் மார்ச் 2-ல் நடைபெறவுள்ள செமிஞ்சே இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) சார்பாக நிக் அஜிஸ் அஃபிக் அப்துல் போட்டியிடலாம் என நம்பப்படுகிறது.

கடந்த 2004 முதல், அத்தொகுதியில் போட்டியிட்டு வரும், கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வனுக்குப் பதிலாக, நிக் அஜிஸ்-ஐ களமிறக்க கட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

“பி.எஸ்.எம். செமிஞ்சே இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி. 2004 முதல் நாங்கள் போட்டியிட்டுவரும் தொகுதி இது. எனவே, இம்முறையும் நாங்கள் கண்டிப்பாக போட்டியிடுவோம்,” என மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

நிக் அஜிஸ், செமிஞ்சேவைச் சேர்ந்தவர் என்பதால், அவரை அங்கு வேட்பாளராக நிறுத்துவதே சிறந்தது என கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மலாய்க்காரர் வாக்குகளைக் கவருவதற்காக அவரை அங்கு வேட்பாளராக நிறுத்தவில்லை, மாறாக, நீண்ட காலமாக அருட்செல்வனுடன் இணைந்து, செமிஞ்சே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நிக் அஜிஸ் நன்கு கண்டறிந்தவர், தகுதியானவர் என்பதனால்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் பி.எஸ்.எம். ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 14-வது பொதுத் தேர்தலின் போதே, நிக் செமிஞ்சே சட்டமன்றத்தில், பி.எஸ்.எம். சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், பின்னர் சில காரணங்களால் அவர் அங்கு போட்டியிட முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இதுபற்றி கேட்டபோது, “அது ஓர் ஊகம். பிஎஸ்எம் சார்பாக, அங்குப் போட்டியிட மூவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், அதில் ஒரு பெண்ணும் அடங்குவார்,” என அருட்செல்வன் தெரிவித்தார்.

“நாளை, மத்திய செயலவைக் கூட்டத்தில், இதுபற்றி முடிவெடுக்கப்படும்,” என்றும் அருட்செல்வன் மலேசியாகினியிடம் சொன்னார்.