சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர், கிளேர் ரியூகாஸல்லுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை, லண்டனில், நீதிமன்றத்திற்கு வெளியே முடிக்க பாஸ் தலைவர் அப்துல் ஹாடி முடிவு செய்துள்ளார்.
இத்தகவலை, ஹாடியின் அரசியல் செயலாளர், ஷாஹிர் சுலைமான் தெரிவித்தார்.
இவ்வழக்கின் தீர்வு பின்வருமாறு என்று ஷாஹிர் கூறினார்:
“அப்துல் ஹடி ஆவாங் பிரதிவாதிக்கு எதிரான கோரிக்கையைத் திரும்பப் பெறுகிறார்;
“கிளேர் ரியுகாஸல் பிரௌன் (பிரதிவாதி) அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிரான எதிர் கோரிக்கைகளைத் திரும்பப் பெறுகிறார்;
“செலவினங்களைக் குறித்து எதுவும் கூறப்படவில்லை, மேலும், இரு தரப்பினரும் உடன்பாட்டின் அடிப்படையில், இந்த வழக்கின் இரகசிய ஒப்பந்தங்களுக்கு உட்பட்டவர்கள்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முடிவில் கிளேர் திருப்தி
இதற்கிடையே, சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர், தனக்கு எதிரான வழக்கை, ஹாடி அவாங் நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்த்து கொண்டதில், தனக்கு திருப்தி என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்வின் அடிப்படையில், சரவாக் ரிப்போர்ட்டில் வெளியிடப்பட்ட பாஸ்-ஐ பற்றிய அக்கட்டுரை, தொடர்ந்து தங்கள் பதிவில் இருக்கும் என்றும் கிளேர் மலேசியாகினியிடம் கூறினார்.
“இவ்வழக்கில், எனக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்த அனைத்துத் தரப்பினருக்கும் நான் நன்றி கூறக் கடமைபட்டுள்ளேன்,” என்றார் கிளேர்.
2016, ஆகஸ்ட் 6-ம் தேதி, அம்னோ மற்றும் பி.என்.-க்கு ஆதரவாக, பாஸ்-ஐ திசைதிருப்ப, நஜிப் பாஸ் மூத்தத் தலைவர்களுக்கு RM90 மில்லியன் நிதி வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
பாஸ் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, கிளேர் மீது வழக்குத் தொடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியது.
2017, ஏப்ரல் 21-ம் தேதி, லண்டன் நீதிமன்றத்தில், கிளேருக்கு எதிராக அப்துல் ஹாடி வழக்கு தொடர்ந்தார்.