இஸ்ரேல் வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்த புத்ராஜெயாவின் முடிவினால், சர்வதேச நீச்சல் போட்டியினை ஏற்று நடத்தும் மலேசியாவின் உரிமை இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சரவாக்கிற்குச் சுமார் RM5 மில்லியன் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின் ச்சியூ செய்திகளின் படி, சரவாக் தங்கும்விடுதி உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில், அடுத்தாண்டு ஜூலை மாதம், கூச்சிங்கில் நடைபெறவிருக்கும் ‘2019 பாரா உலக நீச்சல் போட்டி’யில் பங்கேற்க 600-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் சரவாக்கிற்கு வரவிருந்தனர்.
“போட்டிகள் ஒரு வாரம் மட்டுமே நடந்தாலும், நீச்சல் வீரர்களும் அவர்களின் பயிற்றுநர்களும் 2 வாரங்கள் இங்கு தங்கவிருந்தனர்.
“இப்போது, அப்போட்டி இரத்து செய்யப்பட்டுவிட்டதால், எங்களால் இந்தக் குறுகிய நேரத்தில் அவ்வளவு இடங்களையும் நிரப்ப முடியாது,” என்று சங்கத்தின் செயலாளர் ஜோன் தியோ கூறியதாக அச்சீனப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம், அனைத்துலக பாராலிம்பிக் செயற்குழு (ஐபிசி), மலேசியா அப்போட்டியை ஏற்று நடத்துவதற்காக உரிமையை இரத்து செய்தது.
மலேசியா இஸ்ரேல் நீச்சல் வீரர்களை, நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து, போட்டியை வேறு நாட்டில் நடத்துமாறு இஸ்ரேல் விடுத்த கோரிக்கையின் விளைவாக, ஐபிசி இந்த முடிவை எடுத்தது.
ஹோட்டல் துறை மட்டுமின்றி, சுற்றுலாத்துறை, உணவகங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பேரங்காடிகளும் இந்த இழப்பை எதிர்நோக்கியுள்ளதாக தியோ தெரிவித்தார்.
சில சுற்றுலா நிறுவனங்கள், அதிகரிக்கவுள்ள சுற்றுப்பயணிகளின் வரவைச் சமாளிக்க, புதிய வாகனங்களை வாங்கியுள்ளதாக கூறிய அவர், இப்போட்டி இரத்து செய்யப்பட்டுவிட்டதால், சிபு, மிரி மற்றும் முலு தேசியப் பூங்காவிற்கான சுற்றுப்பயணிகள் எண்ணிக்கையிலும் கணிசமான சரிவை ஏற்படுத்தும் என்றும் சொன்னார்.
இவ்விவகாரத்தில், மத்திய அரசாங்கம் தங்கள் நிலைப்பாட்டை மாற்றினால் ஒழிய, தங்களால் (மாநில அரசால்) ஏதும் செய்ய இயலாது என்று, சரவாக் சுற்றுலா, கலை, பண்பாடு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கூறியதாகவும் சின் ச்சியூ பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது.