நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு : சரவாக் ரிப்போர்ட் கட்டுரையைப் பாஸ் ஒப்புக்கொள்கிறதா, எம்பி கேள்வி

‘சரவாக் ரிப்போர்ட்’டுக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொண்டதன் வழி, அக்கட்டுரை – அம்னோ – பாரிசானுக்கு ஆதரவு தெரிவிக்க பாஸ் மூத்தத் தலைவர்கள் RM90 மில்லியனைப் பெற்றனர் – உண்மை என்பதைப் பாஸ் ஒப்புக்கொள்கிறதா என்று கெப்போங் எம்பி, லிம் லிப் ஏங் கேள்வி எழுப்பியுள்ளார்.

“சட்ட ரீதியிலான கட்டணங்களுக்காக RM2.5 மில்லியனுக்கும் மேல் செலவழிக்கப்பட்டு, எதிர்வரும் ஏப்ரல் மாதம், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியுள்ள வேளையில், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மிக எளிதாக நம்பிக்கையற்று போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“குறிப்பாக, அவருடையக் கட்சி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதியைப் பெற்றுள்ளது எனும் குற்றச்சாட்டு, இது ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையானது, சரவாக் ரிப்போர்ட்டின் அக்கட்டுரை உண்மையானதே எனும் எண்ணத்தை உருவாக்கியுள்ளது என்று லிம் கூறியுள்ளார்.

“இக்குற்றச்சாட்டு பற்றி, ஹாடி அல்லது பாஸ் கட்சியின் பிற தலைவர்கள் யாராவது, தைரியமாக, ‘ஆம்’ , ‘இல்லை’ என்று பதிலளிப்பார்களா?”

“மக்கள், கிளாந்தான் மற்றும் திரெங்கானு வாக்காளர்கள், பாஸ் உறுப்பினர்கள், உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஆகியவை அவர்களின் பதிலைத் (கேள்விக்கு) தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.