ஏஇஎஸ் தானியங்கிக் கேமராக்களை, முன்பு எதிர்த்து வந்த பக்காத்தான் ஹராப்பான் ‘போராளிகள்’ இப்போது எங்கேப் போனார்கள் என்று ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது அப்போராளிகளின் குரலைக் கேட்க முடியவில்லை என்று, அதன் தகவல் பிரிவுத் தலைவர் ஜோஹான் அஸாம் முகமட் யாசின், இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“இன்று, ஹராப்பான் அரசாங்கம் அமைத்த பின்பு, ஏஇஎஸ்-ஐ அழிக்க வேண்டும் எனும் அமானா உதவித் தலைவர் மாஃபூஸ் ஓமாரின் போராட்டத்தைக் காண முடியவில்லை, அது வெறும் பொய் கதையாகிப் போனது.
மாறாக, இன்று அத்திட்டம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதோடு, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் இன்னும் அதிகமாக அக்கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அதுவும், முன்பு ஒரு கேமராவுக்கு RM170,000 –ஆக இருந்த செலவு தொகை, இப்போது RM200,000-ஆக உயர்ந்துவிட்டது.
“இது தொடர்பில், இன்று மனித வளத்துறை துணையமைச்சராக இருக்கும் மாஃபூசின் நிலைப்பாடு என்னவென்று தெரிந்துகொள்ள, நானும் ஜொகூர் மக்களும் காத்திருக்கிறோம்,” என்று அவர், அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஹராப்பான் தலைவர்கள், ஏஇஎஸ் தானியங்கி கேமராக்களைக் கடுமையாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு, ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவுக்கு வந்த, தனியார் நிறுவனங்களான இரண்டு ஏஇஎஸ் ஆபரேட்டர்களின் ஒப்பந்தத்தை ஹராப்பான் அரசாங்கம் தொடரவில்லை. மாறாக, செப்டம்பர் 1 தொடக்கம், அத்திட்டம் போக்குவரத்துத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
மாஃபூஸ் மட்டுமின்றி, ஏஇஎஸ் கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கும் போக்குவரத்து துறையமைச்சர் அந்தோனி லோக்கின் முடிவை, லிம் குவான் ஏங் எதிர்பாரா என்று நிதியமைச்சர் பற்றியும் ஜோஹான் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கிடையே, தனது முகநூல் பதிவில், ஏஇஎஸ் தொடர்பான தனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை என்று மாஃபூஸ் கூறியுள்ளார்.
“எனதி நிலைபாட்டில் மாற்றம் இல்லை, அரசாங்கம் இதனைக் கருத்தில் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்,” என்று மாஃபூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.