குடிநீர் விநியோகத்தை நிறுத்துவது கொடுமையிலும் கொடுமை

சட்டமன்ற உறுப்பினர் பேசுகிறார் | பத்தாண்டுகளுக்கு முன்பு சாடா (ஷரிகாட் ஆயர் டாருல் அமான்), கெடா, சுங்கை பட்டாணியில், சுங்கை கித்தா தோட்டத்தில் சுமார் 50 முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் ரிம22,000ஆக பெருகிவிட்ட குடிநீர் கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டதற்காக அவர்களுக்குக் கிடைத்த வந்த குடிநீரை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியது.

உண்மையில் அதற்கு முன்புகூட அங்கு நீர் விநியோகம் நிறுத்தப்பட்டு பின்னர் உள்ளூர் கம்பத்துக்க்குழு முயற்சியால் நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் மீண்டும் 2009-இல் கிடைத்தது.

குடியிருப்பாளர்கள் குடிநீர் கட்டணம் கட்டவில்லை அதனால் விநியோகம் துண்டிக்கப்பட்டது என்கிறது சாடா.

அதன் பின்னர் பத்தாண்டுகளாக குடியிருப்பாளர்கள் என்னென்னவோ முயற்சிகள் செய்து பார்த்தும் அவர்களுக்குக் குடிநீர் இணைப்பு இன்னும் கிடைக்கவில்லை.

அதனால் அவர்கள் கிணறுகள் வெட்டி அவற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், தண்ணீர் தரமானதாக இல்லை.

கிணற்றில் உள்ள அசுத்த நீரை அருந்தியதால் பலர் சுகாதாரப் பிரச்னைகளை எதிர்நோக்குகிறார்கள்.

அவர்களுக்குக் குடிநீர் மட்டுமே பிரச்னை அல்ல, சில ஆண்டுகளாக மின்சாரமும் இல்லை. சொந்தமாக மின் உற்பத்திக் கருவிகளை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.

தேசிய நீர்சேவை ஆணையமான ஸ்பானைப் பொருத்தவரை குடிநீர் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என்றாலும்கூட, நீர் விநியோக நிறுவனங்கள் விருப்பம்போல் குடிநீர் விநியோகத்தைத் துண்டிக்க முடியாது.

சுங்கை கித்தா தோட்டத்தில் குடிநீரைத் துண்டித்து விட்டால் அங்குள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரிதவிக்குமே என்ற எண்ணம்கூட சாடாவுக்கு இல்லாமல் போனது. குடிநீரைத் துண்டிப்பதற்குமுன் நீதிமன்ற ஆணையைப் பெற்றிருக்கலாம். அதையும் அது செய்யவில்லை.

நீதிமன்றம் சென்றிருந்தால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் அவதிப்படுவார்களே என்பதை நீதிமன்றம் நிச்சயம் எண்ணிப்பார்த்திருக்கும்.

அண்மையில் கெடா ஆட்சிக்குழு உறுப்பினரும் புக்கிட் செலாம்பாவ் சட்டமன்ற உறுப்பினருமானவர் மீண்டும் குடிநீர் விநியோக இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றார். ஆனால், அந்த 10-ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர் அதைத் தடுத்து சட்டப்பூர்வ நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார்.

நிலச் சொந்தக்காரருக்குக் இத்தனை ஆண்டுக்காலமாக தோட்டத்தில் வாழ்ந்துவரும் குடியிருப்பாளர்களின் போக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் அவர்களை அங்கிலிருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை.

இதனிடையே, ஒரு பொறுப்பான அரசு நிறுவனமான சாடா, குடியிருப்பாளர்களுக்குக் குடிநீர் விநியோகத்தைத் திரும்பவும் ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தடையாக இருப்பவர் நில உரிமையாளர்தான் என்று காரணம் சொ.ல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

அதேபோல், கெடா அரசும், குடியிருப்பாளர்கள் தனியார் நிலத்தில் இருப்பதால் தனக்குத் தலையிடும் அதிகாரம் இல்லை என்ற காரணத்தை முன்வைக்கக் கூடாது. அது ஏற்கத்தக்கதல்ல.

அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர், குடியிருப்பாளர்கள் பட்ட கடனைத் தீர்ப்பதற்கு சாடாவுடன் பேச்சு நடத்தத் த்யாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

குடியிருப்பாளர்கள் அவர்கள் தனியார் நிலத்தில் வசிப்பவர்களாயினும் அவர்களுக்குக் கிடைத்து வந்த குடிநீரைத் துண்டிப்பது மிகுந்த கொடிய செயலாகும். இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயலை எந்தவொரு பண்பார்ந்த அரசும் பார்த்துக் கொண்டிராது.

ஆனால், சுங்கை கித்தா குடியிருப்பாளர்களுக்கு அது நடந்துள்ளது. நடந்ததற்கு சப்பைக் காரணமும் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஓர் அடிப்படை உரிமையான தண்ணீர்கூடக் கிடைப்பதற்கு வழிசெய்ய முடியவில்லை என்கிறபோது சிறப்பான கொள்கை அறிக்கையைத் தயாரித்து அதைப் பகட்டாகக் காண்பித்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை.


பி. இராமசாமி- பிறை சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு துணை முதல்வர்.