ஆய்வு நிறுவனம்: ஹரப்பான் கொள்கைகளாலும் உள்சண்டைகளாலும் செல்வாக்கு இழந்து வருகிறது

ஆய்வு நிறுவனமான Fitch Solutions Macro Research, பக்கத்தான் ஹரப்பான் செல்வாக்கு, மற்றவற்றோடு உள்சண்டைகளாலும் அதன் கொள்கைகளாலும் அடுத்த சில மாதங்களில் சரிவு காணும் என ஆய்வுகளில் தெரிய வருவதாகக் கூறியுள்ளது.

ஹரப்பான் உடையுமா என்ற நோக்கில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிய அந்நிறுவனம் ஆனால், அதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டது.

“மூன்று காரணங்களால் ஹரப்பான் ஆதரவு சரியுமென்று ஆய்வுகளில் தெரிய வந்தது- முதலாவதாக, வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க அரசாங்கம் உதவவில்லை என்ற எண்ணம் வாக்காளர்களிடையே வளர்ந்து வருகிறது.

“இரண்டாவதாக, கூட்டணியில் ஒற்றுமைக்குறைவு அடிக்கடி அப்பட்டமாக தெரிவது; மூன்றாவதாக, ஹரப்பான் அரசாங்கம் கூடுதலான இனச் சமத்துவத்தை ஏற்படுத்திப் “புதிய மலேசியா”வை உருவாக்கப் போகிறது என்ற வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்குக் கிட்டிய ஏமாற்றம்”, என அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

மாதச் சம்பளம் ரிம1,500 ஆக்கப்படும், எரிபொருள் உதவித் தொகை மீண்டும் கொடுக்கப்படும் என்றெல்லாம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை ஹரப்பான் அரசாங்கத்தால் காப்பாற்ற முடியாமல் போனதும் அதிருப்தி பெருகக் காரணமாகும் என்றது குறிப்பிட்டது.

“அரசாங்கம் ஜனவரி மாதத்திலிருந்து குறைந்தபட்ச சம்பளத்தை ரிம1050 ஆக உயர்த்தியதும் எரிபொருள் விலைகள் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக 2018 ஜூன் 7-இலிருந்து ஆண்டு வரைக்கும் எரிபொருள் உதவித் தொகையாக ரிம3 பில்லியனை ஒதுக்கி வைத்ததும் உண்மைதான். 2019ஆம் ஆண்டுக்கு எரிபொருள் உதவித் தொகை ரிம2 பில்லியனாகக் குறைக்கவும் எரிபொருள் விலைகளை மிதக்கவிடவும் முடிவு செய்யப்பட்டது.