கிரேப் ஓட்டுநரான, பி மணிவண்ணன், 50, இந்துவான தனது மகளை, பள்ளியில் இஸ்லாம் பாடத்தைப் படிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது மனைவி, மகளின் அம்மா, இஸ்லாத்திலிருந்து வெளியேறுவதற்காக தொடுத்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், தனது மகளைப் பள்ளி கட்டாயப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, கல்வி அமைச்சு இதில் தலையிட்டு, தனது 9 வயது மகள், எம் லுகனேஸ்வரியின் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கொடுக்க வேண்டுமென அவர் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டார்.
தனது மனைவி, பரமேஸ்வரி, ஓர் இந்துவாகப் பிறந்தவர். அவருக்கு 3 வயது இருக்கும்போது, இஸ்லாத்தைத் தழுவிய அவரின் பெற்றோர், பரமேஸ்வரியின் பெயரை சித்தி ஃபாத்திமா பரமேஸ்வரி என்று மாற்றி வைத்தனர் என்று மணிவண்ணன் மலேசியாகினியிடம் சொன்னார்.
“இருப்பினும், அவர் தனது 18-வது வயதில், வீட்டிலிருந்து வெளியேறி, என்னைத் திருமணம் செய்துகொண்டார். அதுமட்டுமின்றி, ஷா ஆலாம் ஷரியா நீதிமன்றத்தில், இஸ்லாத்திலிருந்து வெளியேற மனுவும் போட்டுள்ளார்.
“இப்போது பிரச்சனை என்னவென்றால், தேசியப் பதிவிலாகாவில் (ஜேபிஎன்), என் மகளை இஸ்லாம் என்று குறிப்பிட்டுள்ளனர்,” என்றார் அவர்.
பிறப்புப் பத்திரம்
மகளின் பிறப்புப் பத்திரத்தில், தகப்பனார் எனும் இடத்தில், தன்னுடையப் பெயர் பதிவிடப்படவில்லை என்றும் மணிவண்ணன் தெரிவித்தார்.
“என் மகளின் பிறப்புச் சான்றிதழுக்குப் பதிந்த பொழுது, ஜேபிஎன் அதிகாரியிடம், என் மனைவி இஸ்லாத்திலிருந்து விலக விண்ணப்பித்துள்ளதை நாங்கள் தெரிவித்தோம். அவரும் என் மகளை ‘இந்து’ என்றே பதிந்தார், ஆனால், பிறப்புப் பத்திரம் வெளியான போது, அதில் என் மகள் ‘இஸ்லாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“என்னுடையப் பெயர் அதில் குறிப்பிடப்படாமல், தகப்பனார் எனும் இடத்தில், ‘தகவல் பெறப்படவில்லை’ (maklumat tidak diperolehi) என்றும் எழுதப்பட்டிருந்தது,” என்றார் மணிவண்ணன்.
தனது மனைவியை இந்து முறைப்படி திருமணம் செய்து, சத்தியப் பிரமாண ஆணையரிடமிருந்து பெறப்பட்ட திருமணச் சான்றிதழும் தன்னிடம் உள்ளதாக மணிவண்ணன் தெரிவித்தார்.
பிறப்புச் சான்றிதழ் பிரச்சனையால், தன் மகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க முடியவில்லை என்றும், அதனால் தேசியப் பள்ளியில் சேர்த்ததாகவும் கூறிய மணிவண்ணன், அம்மலாய்ப் பள்ளியில் தனது மகளை இஸ்லாமியப் பாடத்தைப் படிக்க கட்டாயப்படுத்துவதாகச் சொன்னார்.
“பிறந்ததிலிருந்து என் மகள் இஸ்லாம் போதனைகளைக் கடைப்பிடித்தது இல்லை. நாங்கள் அம்மதத்தை மதிக்கிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதுபோல், என் மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு உண்டு.
“எனவே, என் மகளைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். இப்பிரச்சனையில் கல்வி அமைச்சு எங்களுக்கு உதவ வேண்டும், என் மனைவியின் வழக்கு முடியும் வரை, யாரும் என் மகளைக் கட்டாயப்படுத்தாமல் இருப்பதைக் கல்வி அமைச்சு உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் மணிவண்ணன்.
வேறு பள்ளியைத் தேடிப் போ
பள்ளியில் கூறப்படுவதைக் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால், வேறு பள்ளிக்கு மாறி செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாகவும் அவர் மேலும் சொன்னார்.
“எங்களிடம் திருமணச் சான்றிதழ் இருந்தும், ஏன் என் பெயரை மகளின் பிறப்புப் பத்திரத்தில் போடவில்லை? ஏன் என் மகளை இஸ்லாம் என்று பதிந்தனர் என்பதை ஜேபிஎன் எனக்கு தெளிவுபடுத்த வேண்டும்,” என்றார் மணிவண்ணன்.
தன் மகளின் பிறப்புப் பத்திரத்தில், தவறான தகவல்களைப் போட்டுள்ளதாக ஜேபிஎன் மீது போலிசில் புகார் செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
கல்வி அமைச்சர், மஸ்லி மாலிக்கைத் தொடர்புகொண்டபோது, இப்பிரச்சனையை விசாரிக்கவுள்ளதாக உறுதி அளித்தார்.
“இவ்விஷயத்தை, விரைவாக விசாரிக்க அமைச்சின் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்,” என்றார் மஸ்லி.