செமிஞ்சே இடைத்தேர்தல் | பிரச்சாரம் செய்வதில் பிரபலமானவராகக் கருதப்படும் முகமட் ஃபாரிட் ரவி அப்துல்லா, தான் செமிஞ்சே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை மறுத்தார்.
சிலாங்கூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகக் கல்லூரியின், ஆராய்ச்சி மேலாண்மை மையத்தின் இயக்குநரான ஃபாரிட், செமிஞ்சே இடைத்தேர்தலில், அம்னோ சார்பாகப் போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
உண்மை நிலவரத்தை அறிய, மலேசியாகினி தொடர்புகொண்டபோது, அத்தகவலை மறுத்த ஃபாரிட், இன்று அது தொடர்பாக பல தொலைபேசி அழைப்புகளையும் குறுந்தகவல்களையும் தான் பெற்று வருவதாக சொன்னார்.
“எனக்குத் தெரியவில்லை, புலனம் மற்றும் முகநூல் நண்பர்களிடம் இருந்து எனக்கு பல கேள்விகள் வந்தபடி உள்ளன.
“வேட்பாளர்கள் பட்டியலில் நான் இல்லை. அரசியலில் ஈடுபடும் ஆர்வமும் எனக்கு இல்லை,” என்றார் அவர்.
அதுமட்டுமின்றி, இதுவரை அம்னோவிலிருந்து யாரும் தன்னை அணுகி, இதைப்பற்றி பேசவில்லை என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, அம்னோ சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிட அறுவரின் பேர் முன்மொழியப்பட்டுள்ளதாக செமிஞ்சே அம்னோ தலைவர், ஜோஹான் அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் பிப்ரவரி 13 அல்லது 14-ம் தேதி, அம்னோ தனது வேட்பாளரை அறிவிக்கலாம் என்றும் ஜோஹான் கூறினார்.