புதிய உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள தயாராகுமாறு மாட் சாபு அமானாவை கேட்டுக் கொண்டார்

‘சரவாக் ரிப்போர்ட்’ -க்கு எதிரான வழக்கை, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துகொண்ட ஒருசில நாட்களில், புதிய உறுப்பினர்களை வரவேற்கத் தயாராகுமாறு, மாட் சாபு அமானா உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஸ் தலைவரின் முடிவால், ஏமாற்றம் அடைந்திருக்கும் கட்சி உறுப்பினர்களை வரவேற்பதாக மாட் சாபு, நேற்று பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

“பாஸ் உட்பட, எந்தக் கட்சியில் இருந்தும் உறுப்பினர்களை வரவேற்க அமானா தயாராக இருக்கிறது. இதற்கு முன்னர் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அமானாவிற்கு இடம்பெயர விரும்பும் பாஸ் உறுப்பினர்கள் மீது பழிவாங்கும் எண்ணம் ஏதுமில்லை,” என்றார் அவர்.

“புதிய மலேசியா என்ற உணர்வோடு, மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்துடன் நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும், நீண்ட காலமாக நாட்டை அழித்துவரும் அம்னோவுடன் அல்ல,” என்று அவர் கூறினார்.

கடந்த சில நாட்களாக, பாஸ் தலைவரின் முடிவால் ஏமாற்றம் அடைந்திருக்கும் உறுப்பினர்களிடமிருந்து தனக்கும் மற்ற அமானா தலைவர்களுக்கும் பாஸ் நண்பர்களிடமிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருப்பதாகவும் முகமட் சாபு விளக்கினார்.