புதியத் தோற்றத்திலான நகரம், செமிஞ்சே குடியிருப்பாளர்கள் விருப்பம்

எதிர்வரும் மார்ச் 2-ம் தேதி, நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலினால், செமிஞ்சே தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி, மக்களின் பார்வையும் அந்த நகரின் மீது விழுந்துள்ளது.

புக்கிட் புரோகாவிற்கு அருகில் இருக்கும் இந்த நகரம், 1953-இல், கம்யூனிச எதிர்ப்பு அணிவகுப்பு நடத்திய ஓர் இடமாகும். தற்போது, செமிஞ்சே சட்டமன்றத்தைச் சார்ந்த மக்கள், தங்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடமாக அது திகழ்கிறது.

இடைத்தேர்தலை முன்னிட்டு, அங்குள்ள மக்கள் மற்றும் வணிகர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில், அவர்கள் செமிஞ்சே நகரைப் புதியத் தோற்றத்தில் காண விரும்புவதாக ஃப்.எம்.தி. கூறுகிறது. குறிப்பாக, பொது போக்குவரத்து, ஈரச் சந்தை வியாபாரம் மற்றும் நகரின் நடுவில் வீற்றிருக்கும் பாலம் ஆகியவற்றை மாற்றியமைக்க அங்குள்ள குடியிருப்பாளர்கள் விரும்புவதாகத் தெரிகிறது.

மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்க்கும் ஒரு மக்கள் பிரதிநிதியை அங்குள்ளோர் விரும்புகின்றனர் என்று முஹிடின், 54, தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சிறு வியாபாரிகளுக்கு, 2 மாடியில் ஒரு வணிகக் கட்டடத்தையும் அமைத்து தரவேண்டும் என்று அவர் சொன்னார்.

“இங்குள்ள ஈரச் சந்தையைப் புதுப்பிக்க வேண்டும், என்னைப் போன்று, தெரு ஓரத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.

“இதனால், விபத்து போன்ற எதிர்பாரா சம்பவங்களை நாம் தடுக்கலாம்,” என்றும் அவர் சொன்னார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள, பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று, ஜேம்ஸ், 50, கூறினார். நகரத்தின் நடுவே அமைந்திருக்கும் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டால், சாலை நெரிசலைக் குறைக்க வாய்ப்புண்டு என்றார் அவர்.

பொது போக்குவரத்து வசதிகளை, குறிப்பாக பேருந்து சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நகரத்தில் கட்டப்பட்டிருக்கும் பஸ் முனையம், இதுவரை பயன்படுத்தப்படாமலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

எஸ் சுப்ரமணியம், 68, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“இந்நகரத்தில், போதிய கார் நிறுத்தும் இடங்கள் இல்லை. அதனால், பலர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் சாலை நெரிசல் ஏற்படுகிறது,” என சுப்ரமணியம் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 11-ம் தேதி, மாரடைப்பு காரணமாக பெர்சத்துவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர், பக்தியார் முகமட் நோர், 57, காஜாங் மருத்துவமனையில் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் மார்ச் 2-ம் தேதி, செமிஞ்சே இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

-ஃப்ரி மலேசியா டுடே