பாஸ் கட்சி ரிம90 மில்லியன் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து எம்ஏசிசி விசாரணை

பாஸ் கட்சியின் ஆதரவுக்காக அதன் தலைவர்களுக்கு   அம்னோ    ரிம90 மில்லியன் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரம்மீது மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி), விசாரணை தொடங்கியுள்ளதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

அவ்விவகாரம்மீது போலீசிடமிருந்து அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து எம்ஏசிசி விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அது கூறிற்று.

விசாரணைக்கு உதவ பலர் அழைக்கப்படுவார்களாம்.

“இதன் தொடர்பில் பொறுமை காக்க வேண்டும் என்றும் விசாரணை தொடர்பாக ஊகங்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்”. என்று அவ்வட்டாரம் கூறியது.

2016-இல், சரவாக் ரிப்போர்ட்-டில் வெளிவந்த ஒரு செய்தி பாஸ் தலைவர்களின் ஆதரவுக்காக அம்னோ ரிம90 மில்லியனை கொடுத்ததாகவும் அப்பணம் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பணமாக இருக்கலாம் என்றும் கூறியது.

பெர்னாமா