சமீபத்தில், தி இக்குவானிமிட்டி சொகுசு கப்பலின் ஏலம் தோல்வியைத் தழுவியப் பின்னர், சித்பா செல்வார்ட்னா, அக்கப்பலை இனி 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்க முடியாது என்று கூறியுள்ளார்.
தோமி தாமஸ் சட்ட நிறுவனத்தில், ஒப்பந்த ஆலோசகராக இருக்கும் சித்பா, சில ஏலதாரர்கள் தங்கள் விலைகளில் சந்தர்ப்பவாதமாக உள்ளனர் என்று கூறினார்.
“தற்போது, 100 மில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறைவான விலையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை, ஆனால் அது மலிவான விலை அல்ல. அதன் மதிப்பை அடிப்படையாகக் கொண்ட விலை கொடுக்கப்படலாம்,” என்று அவர் கூறியதாக, ப்ளூம்பெர்க் செய்திகள் கூறுகின்றன.
கடந்தாண்டு பிப்ரவரியில், 1எம்டிபி ஊழலில் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றான இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பல், அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், இந்தோனேஷிய அதிகாரிகள் பாலி கடற்கரையில் கைப்பற்றினர்.
300 அடி நீளமுள்ள அப்படகு, ஜிம்னாசியம், நீச்சல் குளம், கேலரி, அழகு நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் நிறுத்துமிடம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதனைப் பராமரிக்க, புத்ராஜெயா மாதத்திற்கு 500,000 அமெரிக்க டாலர் செலவு செய்யவேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.