டிஎல்பி விவகாரம் – புத்ராஜெயாவின் நிலைப்பாட்டில் பாஸ் சந்தேகம்

இதற்கு முன்னர், முன்மொழியப்பட்ட இருமொழி பாடத் திட்டம் (டிஎல்பி), விரைவில் நாட்டின் தேசியக் கல்வி முறையின் முக்கிய அடித்தளமாக மாற்றப்பட்டால், அதில் ஆச்சரியம் இல்லை என பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில், தாக்கல் செய்திருக்க வேண்டிய டிஎல்பி அமலாக்கத்தின் விளைவுகள் பற்றிய ஆய்வில், சந்தேகம் எழுந்துள்ளதாக டாக்டர் கைருட்டின் அமான் ரசாலி கூறியுள்ளார்.

முந்தைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட டிஎல்பி திட்டம், பல தரப்பினரின் எதிர்ப்புகளினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

ஒரு வெள்ளோட்டத் திட்டமாக, விருப்பத்தின் அடிப்படையிலான திட்டமாக இருந்த டிஎல்பி, தற்போது பரவலாக செயலாக்கம் கண்டுவருவதோடு; கட்டங்கட்டமாக அது கட்டாயப் பாடமாக்கப்படுவது போல் தோன்றுகிறது என்று திரெங்கானு, கோலா நெருஸ் எம்பியுமான அவர் சொன்னார்.

“2007-ல், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில், மாணவர் அடைவுநிலையைப் பாதித்ததனால், இரத்து செய்யப்பட்ட பி.பி.எஸ்.எம்.ஐ. திட்டத்தின் மறு அவதாரம் டிஎல்பி என்பது பிரகாசமாகத் தெரிகிறது,” என்று இன்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிஎல்பி திட்டத்தை, கல்விமான்கள் மட்டுமின்றி அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர் என்று கைருட்டின் மேலும் கூறினார்.

“இப்போது அவர்கள் அரசாங்கமாக மாறிவிட்டனர். புதிய அரசாங்கத்தில் அத்திட்டம் வலுவாக்கப்பட்டது என்றால், அது மிகவும் துரதிர்ஷ்டமானது,” என்றார் அவர்.

எனவே, டிஎல்பி திட்டத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதைப் புத்ராஜெயா விளக்கப்படுத்த வேண்டும் என்றார் கைருட்டின்.

பி.பி.எஸ்.எம்.ஐ. திட்டத்தை, டாக்டர் மகாதிர் பிரதமராக இருந்தபோது, முதன்முதலாக முன்மொழிந்தார்.

பல்வேறு தரப்பினர், அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கோலாலம்பூரில் ஆர்ப்பாட்ட பேரணியையும் நடத்தினர்.

அதன்பிறகு, அப்போது கல்வி அமைச்சராக இருந்த முஹிட்டின் யாசின், 2012-ல் அத்திட்டத்தை இரத்து செய்தார்.

தற்போது, மகாதீர் மீண்டும் பிரதமராக இருக்கும் வேளையில், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக முஹிட்டினும் பொறுப்பு வகிக்கிறார்.