செமிஞ்சேயில் பிஎஸ்எம் போட்டியிடுவது உறுதி

செமிஞ்சே இடைத்தேர்தல் | மார்ச் 2-ம் தேதி நடைபெறவுள்ள செமிஞ்சே இடைத்தேர்தலில், போட்டியிடுவது உறுதி என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) அறிவித்துள்ளது.

ஜனவரி 24 மற்றும் 26-ம் தேதி நடந்த, பிஎஸ்எம் செமிஞ்சே கிளை மற்றும் பிஎஸ்எம் மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, பிப்ரவரி 3-ம் தேதி கூடிய, கட்சியின் மத்தியத் தொழில்நுட்பக் குழு, ஒருமுகமாக அதனை ஏற்றுக்கொண்டதாக கட்சியின் தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மூன்றாவது தரப்பினரை எதிர்பார்க்கும் மக்களின் தேவைக்காக, கட்சி இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

“வரலாற்று காரணிகள், பாரம்பரிய இடம், செமிஞ்சேயில் உள்ள பிஎஸ்எம் தேர்தல்  இயந்திரம், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விருப்பம், கட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ள வேட்பாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு குரலை எதிர்பார்க்கும் நாட்டின் அரசியல் சூழ்நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டே, இடைத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம்,” என சிவராஜன் மேலும் சொன்னார்.

கடந்த 2008-ம் ஆண்டு முதல், பிஎஸ்எம் அத்தொகுதியில் போட்டியிட்டு வருகிறது. கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். எனினும், அவர் ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தங்களின் வேட்பாளரை, வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக கட்சி அறிவிக்கும் என சிவராஜன் தெரிவித்தார்.

“கட்சி தேர்தல் இயந்திரத்தை வலுப்படுத்த, நிதி மற்றும் தன்னார்வ உதவியாளர்களைப் பிஎஸ்எம் வரவேற்கிறது,” என்றும் அவர் கூறினார்.