14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14), அம்னோ மற்றும் பாஸ் இடையேயான மும்முனைப் போட்டி, ஒரு தவறான உத்தி என்பதை, முன்னாள் பாரிசன் நேஷனல் (பிஎன்) தலைவர் நஜிப் ரசாக் ஒப்புக் கொண்டார்.
நேற்றிரவு, லங்காவியில் நடந்த ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய நஜிப், பாஸ் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையே, வாக்குகள் உடைபட்டு, அம்னோ பெரும்பான்மை வாக்குகள் பெறும் என்ற இலக்கைக் கொண்டிருந்ததாக கூறினார்.
ஜிஇ14-க்கு முந்தைய, சுங்கை பெசார் மற்றும் கோலா கங்சாரில் நடந்த இரண்டு இடைத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பாஸ்-ஐ எதிர்த்து போட்டியிட அம்னோ முடிவெடுத்ததாக நஜிப் தெரிவித்தார்.
“அந்த இரண்டு இடைத்தேர்தல்களில், மும்முனை போட்டிகளில், நாம் பெரும்பான்மையில் வென்றோம்.
“ஆனால், அங்குதான் நமது கணக்கு பிழைத்துப் போனது. மும்முனை போட்டிகள், நமக்கு இழப்பையே ஏற்படுத்தும்,” என நஜிப் கூறியதாக ‘தி மலேசியன் இன்சைட்’ கூறியுள்ளது.
அம்னோ –பாஸ் ஒத்துழைப்பு தொடர்ந்து இருந்தால், ஜிஇ14 முடிவுகள் அடிப்படையில் பார்க்கும்போது, அடுத்தப் பொதுத் தேர்தலில், தங்களால் 30 நாற்காலிகளுக்கும் மேல் வென்றெடுக்க முடியும் என நஜிப் தெரிவித்தார்.
“அந்த 30 நாற்காலிகளுடன், சபா சரவாக்கையும் சேர்த்தால், நம்மால் அரசாங்கத்தை அமைக்க முடியும்,” என்றார் அவர்.
அம்னோ – பாஸ் கூட்டணி தொடர்ந்தால், அடுத்தப் பொதுத் தேர்தலில் கெடாவைத் தங்களால் கைப்பற்ற முடியும் என்று, நஜிப்புடன் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பினாங்கு பாஸ் தலைவர் ஜூபிர் அஹ்மாட் கூறினார்.
மலாய் மற்றும் முஸ்லிம் பிரச்சினைகளைப் பயன்படுத்தி, மக்களின் ஆதரவைப் பெற விரைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் மேலும் சொன்னார்.