ரிம 90மில்லியன் மீதான எம்ஏசிசி விசாரணைக்கு நிக் அப்டு வரவேற்பு

பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் நிக் முகம்மட் அப்டு அந்த இஸ்லாமியக் கட்சித் தலைவர்கள் சிலர் அம்னோவிடமிருந்து ரிம90 மில்லியன்வரை நிதி பெற்றதாகக் கூறப்படுவது குறித்து மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்துவதை வரவேற்கிறார்.

விசாரணை நடத்தப்படுகிறதே என்ற பயம் பாஸுக்கு இல்லை என்றவர் டிவிட்டரில் கூறியிருந்தார்.

“பாஸுக்குக் கலக்கமா? இல்லவே, இல்லை, வரவேற்கிறோம் எம்ஏசிசி-யை”, என்றவர் டிவிட் செய்திருந்தார்.

காலஞ்சென்ற பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் மகனான நிக் அப்டு, பாஸின் செல்வாக்குப் பெருகப் பெருக எம்ஏசிசியின் அழுத்தமும் அதிகரிக்கும் என்றார்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்துக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டதை அடுத்து ரிம90 மில்லியன் நிதியளிப்பு விவகாரமும் நிக் அப்டுவின் குரல் ஒலிப்பதிவு விவகாரமும் மறுபடியும் தலைதூக்கியுள்ளது.

அப்துல் ஹாடியின் வழக்கு அம்னோ பாஸுக்கு ரிம90மில்லியன் கொடுத்ததாக அந்த இணையத் தளத்தில் வெளிவந்த செய்தி தொடர்பானது.

குரல் பதிவு என்பது அவ்வழக்கு தொடர்பில் நிக் அப்டு கூறியதாகச் சொல்லப்படும் சில செய்திகளைக் கொண்ட ஒரு பதிவு. அதை சரவாக் ரிப்போர்ட் செய்தி ஆசிரியர் கிளேர் ரியுகாஸல்-பிரவுன் சாட்சிப் பொருளாக தாக்கல் செய்துள்ளார்.

அப்பதிவில் நிக் அப்டு அம்னோவிடமிருந்து ரிம2 மில்லியன் பெற்றதாகக் கூறும் செய்தி உள்ளதாம்.

பாஸ், அம்னோ இரண்டுமே இந்த ரிம90மில்லியன் விவகாரத்தை மறுத்துள்ளன.