பிறையில் தங்கள் 11-வயது மகளைத் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மணம் முடித்து வைக்க முயன்ற ரோஹிங்யா குடும்பம் ஒன்று போலீசார் தலையிட்டதைத் தொடர்ந்து முடிவை மாற்றிக் கொண்டது.
அக்குடும்பம் 21-வயது இளைஞனுக்கு அவர்களின் மகளை ஜனவரி 6-இல் மணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தது. ஆனால், சமூக ஆர்வலரான ஸ்டேன்லி சுதாகாரன் போலீஸ் உதவியுடன் அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார்.
புதன்கிழமை இரவு அத்திருமணம் நடைபெற விருப்பதை போலீசில் புகார் செய்த ஸ்டேன்லி, அக்குடும்பத்துக்கு அறிவுரை கூற போலீசையும் அழைத்துச் சென்றார்.
மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. சிறுமிமியை மணம் செய்துகொடுக்க முயல்வது சட்டப்படிக் குற்றம் என்பதை ஸ்டேன்லி அவர்களுக்கு எடுத்துரைத்தார். கூடவே போலீசாரும் அறிவுரை கூறினர். முடிவில் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.
“போலீஸ் அதிகாரி ஒருவர் மாவட்ட சமய அதிகாரியுடன் அக்குடும்பத்தாருக்குத் தக்க ஆலோசனைகளை எடுத்துரைக்க அக்குடும்பத்தார் திருமணத்தைத் தள்ளி வைக்க ஒப்புக்கொண்டர்”, என செபராங் பிறை தெங்கா போலீஸ் தலைவர் ஏசிபி நிக் ரோஸ் அஸ்ஹான் நிக் அப்துல் ஹமிட் தெரிவித்ததாக பெர்னாமா கூறியது.
“திருமணத்தை நடத்துவதாக இருந்தால் அவர்கள் அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி இஸ்லாமிய சமயத் துறையின் அனுமதியைப் பெற வேண்டும் என்றோம். அவர்கள் புரிந்து கொண்டு விதிமுறைகலைப் பின்பற்றுவதாகக் கூறினர்”, என அஸ்ஹான் சொன்னார்.