கேமரன் மலை இடைத் தேர்தல் பக்கத்தான் ஹரப்பானுக்கு ஒரு நல்ல பாடம் என்று கூறிய அமனா இளைஞர் தலைவர் முகம்மட் சானி ஹம்சா, அங்கு அரசாங்கத் தளவாடங்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டது போன்ற சம்பவங்கள் இங்கும் நிகழக் கூடாது என்றார்.
“செமிஞ்யி இடைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் நேர்மையாக நடந்துகொண்டு இன, சமய உணர்வுகளைத் தூண்டிவிடும் பேச்சுகளிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும்.
“அரசாங்கத் தலைவர்கள் அவர்கள் பிரதமராக இருந்தாலும் துணைப் பிரதமராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் தேர்தல் பரப்புரைக்கு அரசாங்க வாகனங்களையோ, அரசு அதிகாரிகளையோ பயன்படுத்தக் கூடாது.
“பரப்புரை செய்ய விரும்பினால் அவர்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்த வேண்டும். பரப்புரையில் அரசாங்கத் திட்டங்களை இழுக்காதீர்கள். ஏனென்றால், நடப்பது அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒரு போட்டி, அரசாங்கத்துக்கும் அரசியல் கட்சிகளுக்குமிடையிலான போட்டி அல்ல”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.