பெர்சத்துக் கட்சி சாபாவில் கால்பதிக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுவது பற்றி சாபா முதலமைச்சர் ஷாபி அப்டால், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்துப் பேசினார்.
அச்சந்திப்பின்போது ஷாபி, 14வது பொதுத் தேர்தலுக்குமுன் ஒப்புக்கொண்டபடி பெர்சத்து சாபாவுக்குள் நுழையாதிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக ஃப்ரி மலேசியா டூடே கூறியது.
“ஆம், அவரைச் சந்தித்து என் கருத்தைத் தெரியப்படுத்தினேன்.
“தேர்தலுக்குமுன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி நடந்து கொள்வதே நல்லது என்றேன்”, என்று ஷாபி பிரதமரிடம் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம், சாபா அம்னோவின் முன்னாள் தலைவர் ஹாஜிஜி முகம்மட் நூர், பெர்சத்து “விரைவில்” சாபாவில் கால் பதிக்கும் என்று கூறியிருந்தார்.
சாபா அம்னோவிலிருந்து வெளியேறி மகாதிருக்கு ஆதரவு தெரிவித்த எம்பிகளில் ஹாஜிஜியும் ஒருவர். அவர், அம்னோவிலிருந்து வெளியேறியவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் ஒரு மாதம் கலந்துபேசி அதன்பின்னர் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார்கள் என்றும் சொன்னார்.