நஜிப்: என்னுடையப் பட்டப்படிப்பு சான்றிதழ் செல்லுபடியாகும்

1979-ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின், நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், தான் பட்டம் பெற்றதை நிரூபிக்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார்.

“பிரச்சனை இல்லை. நிச்சயமாக என் பட்டம் செல்லுபடியாகும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில், சந்தித்தபோது சொன்னார்.

கல்வித்தகுதிப் பிரச்சினைகளில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களைக் குறை கூறிய நஜிப், அதே பிரச்சினைக்குத் தானும் இலக்காகியிருந்தார்.

நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், நஜிப் தனது படிப்பை முடிக்கவில்லை என்று, கெராஞ்சி சட்டமன்ற உறுப்பினர், சோங் ஜேமின் (டிஏபி), இன்று குற்றம் சாட்டியிருந்தார்.

முன்னதாக, தவறாக கொடுக்கப்பட்டிருக்கும் சில அமைச்சர்களின் கல்வித் தகுதி குறித்த தகவல்களைச் சரிபார்க்க சொல்லி, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோவுக்கு நஜிப் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா செய்தி நிறுவனத்தில், சில அமைச்சர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் தங்கள் மேற்படிப்பை முடிக்கவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ள தகவல் இருப்பதாக அவர் மேலும் கூறியிருந்தார். அவர்களில் பேராக் மந்திரி பெசார் அஹ்மட் ஃபைசால் அஜுமு, வீட்டுவசதி துறையமைச்சர் ஜுரைடா கமாருட்டின் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மாட் சாபுவும் அடங்குவர்.

இதுபற்றி கேட்டபோது, செய்தி அறிக்கைகள் மற்றும் தொடர்புடைய கட்சி பதிவுகள் ஆகியவற்றிலிருந்து அத்தகவல்களைப் பெற்றதாக பெர்னாமா தலைமை ஆசிரியர், ஜகரியா வஹாப் தெரிவித்தார்.