ஆடிப் புலன்விசாரணை | ஆடிப் மரணத்தின் காரணத்தை ஆராய்வதற்காக, புலன்விசாரணை குழுவினர், இன்று சம்பவம் நடந்த, சுபாங்ஜெயா, சீஃபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்குச் சென்றனர்.
புலன்விசாரணை அதிகாரி ரோஃபியா முகமட் தலைமையில், புலன்விசாரணை ஒருங்கிணைப்பு அதிகாரி ஹம்டான் ஹம்ஸா மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் வழக்கறிஞர் குழுவும் சம்பவம் நிகழ்ந்த கோயிலுக்குச் சென்றனர்.
ஷா ஆலாம் புலன்விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த 3 சாட்சிகளும் அக்குழுவினருடன் சென்றனர்.
அம்மூவரும், தங்கள் வாக்குமூலத்தில் குறிப்பிட்ட, சம்பவம் நிகழ்ந்த இடங்களை அக்குழுவினருக்குக் காட்டினர்.
நேற்றைய விசாரணையின் போது, தீயணைப்பு வண்டியும் இஎம்ஆர்எஸ் வேனும் கலவர இடத்தைவிட்டு வெளியேறி, யூ.எஸ்.ஜே.8 காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், அதுவரை வேனில் தன்னுடன் இருந்த ஆடிப்பை, அப்போது வேனில் காணவில்லை என்றும் ஷாரில் கூறியிருந்தார்.
“ஆக, ஆடிப் எப்போது வேனில் இருந்து வெளியேறினார்? எனக்கு தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது,” என்று ஷாரிலின் வழக்குரைஞர் ஷாஸ்லின் மன்சோர் கேட்டார்.
அதனைத் தொடர்ந்து, கலவரத்தின் போது பணியில் இருந்த தீயணைப்பு வண்டி மற்றும் இஎம்ஆர்எஸ் வேன் இரண்டையும் காண, அக்குழுவினர் எஸ்எஸ்17-ல் இருக்கும், சுபாங்ஜெயா தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நிலையத்திற்குச் சென்றனர்.
அவ்வாகனங்களின் உள்ளும் வெளியிலும் காணப்பட்ட சேதங்களை அவர்கள் பார்வையிட்டனர்.