ஆடிப் புலன்விசாரணை | கலவரத்தின் போது ஆடிப் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தில், போலிஸ் புகார் அளிக்கப்பட்டதாக ஆடிப்பின் மேலதிகாரி கூறினார்.
அத்தகவலை, வழக்கு விசாரணையின் மூன்றாம் சாட்சியான, இஎம்ஆர்எஸ் வேன் ஓட்டுநர், அஹ்மட் ஷாரில் ஒத்மான் தெரிவித்தார்.
“கலவரக்காரர்கள் நான் இருந்த வாகனத்தின் கதவைத் திறந்து, என்னைத் தாக்க முயன்றதுபோல், ஆடிப்பையும் தாக்கி இருக்கலாம் என்று நான் நினைத்தேன்.
“தீயணைப்பு வண்டியையே அப்படி மோசமாகத் தாக்கி இருக்கும் போது……… தீயணைப்பு வீரரைத் தாக்குவது பெரிதல்லை…. கையில் கிடைத்திருந்தால் அவருக்கும் நிச்சயம் காயம் ஏற்பட்டிருக்கும்,” என்றார் அவர்.
புலன்விசாரணை ஒருங்கிணைப்பு அதிகாரி ஹம்டான் ஹம்ஸாவின் கேள்விகளுக்கு, அஹ்மட் ஷாரில் இவ்வாறு பதிலளித்தார்.
தானும் தனது மேற்பார்வை அதிகாரியும் சுபாங் ஜெயா காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகக் அவர் கூறினார்.
புகார் அளித்த பின்னர், சிகிச்சைக்காக ஆடிப் அனுமதிக்கப்பட்டிருந்த சைம் டர்பி மருத்துவ மையத்திற்குச் சென்றதாகவும், மாலை வரை அங்கேயே இருந்ததாகவும் ஷாரில் மேலும் சொன்னார்.
அதன்பிறகு, மேல் சிகிச்சைக்காக தேசிய இருதய நிறுவனத்திற்கு (ஐஜேஎன்) மாற்றப்பட்ட ஆடிப், சிகிச்சை பலனளிக்காமல், 2018, டிசம்பர் 17-ம், இரவு 9.41 அளவில் தனது இறுதி மூச்சை நிறுத்தினார்.