கட்கோ குடியேறிகள் அடுத்த புதன்கிழமை எம்பி-ஐ சந்திக்கின்றனர்

அடுத்த புதன்கிழமை, பிப்ரவரி 20-ம் தேதி, நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் அமினுட்டின் ஹருண், கட்கோ குடியேறிகளைச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கட்கோ மக்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

இன்று காலை, கட்கோ நிலப் பிரச்சனைக்கு, உறுதியளித்ததுபோல் இதுவரை தீர்வு கொடுக்கப்படவில்லை என்று காரணங்கூறி, கட்கோ குடியேற்றக்காரர்கள் மந்திரி பெசார் (எம்பி) அலுவலகத்தின் முன் மறியலில் ஈடுபட்டனர்.

இன்று வருவதாக, ஏற்கனவே கடிதம் வழி தெரியப்படுத்தி இருந்தும், அவர்களைச் சந்திக்க, எம்பி வராமல் இருந்ததால், அவரைச் சந்திக்கும் வரை, அங்கேயே இருக்கப் போவதாக அவர்கள் முடிவெடுத்திருந்தனர்.

“எம்பியைச் சந்திக்காமல் இங்கிருந்து நகரப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். இன்றிரவை இங்கேயேக் கழிக்க, நாங்கள் கூடாரங்கள்கூட அமைக்கத் தொடங்கிவிட்டோம்,” என்று அக்குழுவிற்குத் தலைமையேற்றிருந்த, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) சிரம்பான் கிளைத் தலைவர் விஜயகாந்தி, மலேசியாஇன்று-விடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, மாலையில், அவர்களைச் சந்திக்க அங்கு வந்த, ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ் வீரப்பன் மற்றும் ஶ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் எம் இரவி இருவரும், எம்பியைச் சந்திக்க அடுத்த புதன்கிழமையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான உறுதி கடிதத்தையும் கொடுத்துள்ளனர்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், எஸ் வீரப்பன் கையெழுத்திட்ட கடிதத்தை, கட்கோ குடியேறிகள் குழுவின் உறுப்பினர் ஜோன் பெற்றுக்கொண்டார்.

தாங்கள் கடிதம் அனுப்பியப் பின்னரே அங்கு வந்ததாகவும், தங்களைச் சந்திக்க வராத எம்பியின் செயல் வறுத்தமளிப்பதாகவும் ஜோன் தெரிவித்தார்.

“பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைக்கும் முன்னர், இதே எம்பி எங்களுடன் போராட்டத்தில் இணைந்துள்ளார். ஆனால், பதவியில் அமர்ந்த பின்னர், இப்போது அவருக்கு எங்களைச் சந்திக்க நேரம் இல்லாமல் போய்விட்டது.

“2013 மற்றும் 2018 பொதுத் தேர்தல்களில், அவருக்காகவும் ஹராப்பானுக்காகவும் பிரச்சாரம் செய்தவர்கள் இந்த மக்கள்தான். அப்போது, அவர்களின் பிரச்சாரத்திற்கு முக்கிய ஆயுதமாக இருந்த விஷயங்களில் ஒன்று, இந்த கட்கோ நிலப் பிரச்சனையும்தான். ஆனால், இன்று எங்களைச் சந்திக்க அவர் வர மறுக்கிறார்.

“இன்றைய அரசாங்கம், எங்களின் ஆதரவினாலும் மலர்ந்தது என்பதை அவர்கள் மறக்க வேண்டாம்,” என்று ஜோன் கூறினார்.

எனவே, அடுத்த முறை யாராவது அவர்களைச் சந்திக்க வந்தால், இப்படி காக்கவைத்து அலைக்கழிக்காமல், மக்கள் பிரதிநிதிகள், வாக்களித்த மக்களை நல்லமுறையில் உபசரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேசமயம், இன்று தங்களைச் சந்திக்க வந்திருந்த வீரப்பன் மற்றும் இரவி இருவருக்கும், கட்கோ மக்கள் சார்பாக, ஜோன் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

“இப்பிரச்சனைக்கு மாநில அரசாங்கம் விரைந்து தீர்வுகாண வேண்டும்,” என்றும் ஜோன் கேட்டுக்கொண்டார்.