எம்ஏசிசி அதிகாரிகள் பாஸ் அலுவலகத்துக்கு வருகை புரிந்தபோது அக்கட்டிடத்தின் ‘லிப்ட்’கூட வேலை செய்யாது பழுதடைந்திருந்தன என்று இஸ்லாமியக் கட்சி தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கிண்டலாகக் கூறினார்.
ஆனாலும், நஜிப் அப்துல் ரசாக் தலைவராக இருந்தபோது அம்னோ பாஸுக்கு ரிம90 மில்லியன் கொடுத்ததாக இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்றாரவர்.
“எம்ஏசிசி அதிகாரிகள் எங்கள் அலுவலகம் வந்தபோது அவர்கள் லிப்டைப் பயன்படுத்த முடியவில்லையாம். ஏனென்றால் அது கெட்டுப் போய்க் கிடந்ததாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எங்களிடம் ரிம90 மில்லியன் இருந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், எங்கள் லிப்ட் கூட கெட்டுப்போய்க் கிடக்கிறது”, என்றவர் கேலியாகக் குறிப்பிட்டார்.
ஹாடி நேற்றிரவு மாராங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார். ரிம90 மில்லியன் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு ஹாடியின் விளக்கங்களும் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சரவாக் ரிப்போர்ட் , குற்றச்சாட்டுகள் அடங்கிய கட்டுரையை அகற்றாமல் அதன் வலைத்தளத்தில் அப்படியே விட்டு வைத்திருப்பதை அவர் பொருட்படுத்தவில்லை.
“கட்டுரையை அகற்றினால் என்ன அகற்றாவிட்டால் என்ன. அதுதான் எல்லாருமே படித்து விட்டார்களே”, என்றார்.
சரவாக் ரிபோர்ட் கட்டுரை அரசியல் நோக்கம் கொண்டது என்று மாராங் எம்பி கூறிக்கொண்டார்.
ஆனாலும், அது கடந்த பொதுத் தேர்தலில் பாஸின் அடைவுநிலையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றார்.
“வெற்றி எங்களுக்கே. கிளந்தானைத் தக்க வைத்துக் கொண்டோம், திரெங்கானுவைக் கைப்பற்றினோம். நாடு முழுக்க 90 சட்டமன்ற இடங்கள், 18 நாடாளுமன்ற இடங்கள்…..பெர்சத்துவுக்கு 13 இடங்கள்தான், எங்களுக்கு 18”, என்றவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாதம் 3,000 பேரும் இம்மாதம் 6,000 பேரும் பாஸில் புதிதாகச் சேர்ந்திருப்பதாகக் கூறிய ஹாடி, இது இஸ்லாமியக் கட்சிமீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காண்பிக்கிறது என்றார்.