செமிஞ்சேயில் பி.எஸ்.எம். வேட்பாளராக நிக் அஸிஸ் ஆஃபிக்

செமிஞ்சே இடைத்தேர்தல் | மார்ச் 2-ல் நடைபெறவுள்ள, செமிஞ்சே இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்தது.

சற்றுமுன்னர், அக்கட்சியின் தேசியத் தலைவர், டாக்டர் நசீர் ஹசிம், பி.எஸ்.எம். செமிஞ்சே கிளை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நிக் அஸிஸ் அஃபிக் அப்துல்-ஐ செமிஞ்சே இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவித்தார்.

‘பெமுடா சோசலிஸ்’ (கட்சியின் இளைஞர் பிரிவு) செயலவை உறுப்பினரான, நிக் அஸிஸ், இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது என்று, இதற்கு முன்னரே பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில், தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன், மத்திய செயலவை உறுப்பினர்கள் எஸ் அருட்செல்வன், டாக்டர் டி ஜெயக்குமார், பெமுடா சோசலிஸ் தலைவர் காலிட் இஸ்மத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிக் தனதுரையில், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் எதிர்த்தரப்பினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், பிஎஸ்எம் ஏன் அதற்கு ஏற்றது என்பதையும் வலியுறுத்தி பேசினார்.

“நமக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை, ஆனால் அது எவ்வகையான எதிர்க்கட்சி?

“இனவெறி ஆயுதங்களைப் பயன்படுத்தி, மக்களைப் பிரித்தாலும் எதிர்க்கட்சியை நாம் விரும்புகின்றோமா?

“இன்னும் ஊழல் மற்றும் மோசடிகளோடு பின்னிப் பினைந்துள்ள எதிர்க்கட்சி நமக்கு தேவையா? அல்லது கொள்கை ரீதியிலான ஓர் எதிர்க்கட்சியை நாம் எதிர்பார்க்கிறோமா?

“பிஎஸ்எம் கட்சி வேட்பாளர்கள் இங்கு மூன்று முறை போட்டியிட்டு தோற்றுபோய் இருந்தாலும், இன்றுவரை செமிஞ்சே மக்கள் சேவை மையத்தை மூடவில்லை, மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது பிஎஸ்எம்,” என்று நிக் சொன்னார்.

தற்போது, சிலாங்கூரில், 56 சட்டமன்ற நாற்காலிகளில், 51 பக்காத்தான் ஹராப்பானிடம் உள்ளது. அம்னோவிடம் நான்கும், பாஸ்-இடம் ஒன்றும் இருக்கின்றது.

“தற்போதைய மாநில அரசு, பெரும்பான்மை இடங்களைக் கொண்டிருப்பது, ஊழலுக்கு அதனை இட்டுச்செல்லும் வாய்ப்பை உண்டாக்கலாம் என நாங்கள் அஞ்சுகிறோம்,” என்றார் அவர்.

25 வயதான நிக் அஸிஸ், செமிஞ்சேயில், பாரம்பரிய உடம்புப்பிடி மையம் வைத்துள்ளார்.

2012-ல், சுல்தான் இஸ்மாயில் பெட்ரா சர்வதேச இஸ்லாமியக் கல்லூரியில், இஸ்லாமிய ஆய்வுகளில் படிப்பை மேற்கொண்ட நிக், தனது டிப்ளமோ படிப்பை நிறைவு செய்யவில்லை.

சில வருடங்களுக்கு முன், கிளந்தான் மாநிலத்திற்குப் பெட்ரோலியம் ராயல்டி வழங்க வேண்டுமென, பாரிசான் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துப் போராடிய ‘ரோயல்டி’ அரசுசாரா அமைப்பில் மிகவும் தீவிரமாக போராடிய ஆர்வலர்களில் நிக் அஸிஸ்-உம் ஒருவர்.

போலி சான்றிதழ் பிரச்சனைகள் இன்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தனது மேற்கல்வியை நிறைவுசெய்யாமல் போனது, தான் போட்டியிடுவதற்குத் தடை அல்ல என்று நிக் அஸிஸ் கூறினார்.

“நாம் நேர்மையாக இருக்கிறோம், மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நமது கல்வித் தகுதியில், நாம் நேர்மையற்றவர்களாக இருந்தால், அதன் தாக்கம் மிகவும் எதிர்மறையாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிஎஸ்எம் வேட்பாளராக நிக் அஸிஸ்-ஐ நிறுத்துவதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக எஸ் அருட்செல்வன் தெரிவித்தார்.

“இன்றைய நடைமுறை அமைப்பில் உடன்படாத, எங்களின் போராட்டங்களை ஆதரிக்கும், வளர்ந்து வரும் இளைஞர்களின் அடையாளமாக நிக் இருப்பார்,” என அருட்செல்வன் தெரிவித்தார்.

“நிக் இளைஞர், இன்னும் திருமணம் ஆகாதவர், பிஎஸ்எம் வேட்பாளராக அவரை நிறுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சி, பிஎஸ்எம் கொடியைச் செமிஞ்சேயில் ஏந்திச் செல்ல, சிறந்த ஒரு வேட்பாளர் நிக் அஸிஸ்,” என்று அவர் மேலும் சொன்னார்.

செமிஞ்சே சட்டமன்றத்திற்கு மூன்று முறை போட்டியிட்டுள்ள அருட்செல்வன், இந்த இடைத்தேர்தலில் கட்சியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.