செமிஞ்யி சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பானுக்கிருந்த ஆதரவு சரிவு கண்டிருப்பதாக சிலாங்கூர் அரசாங்கச் சிந்தனைக் குழு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் இடைத் தேர்தலில் அக்கூட்டணிக்கு 46விழுக்காடு ஆதரவுதான் உள்ளது எனக் கருத்துக் கணிப்பு காட்டுவதாக இன்ஸ்டிடியுட் டார்ல் எஸான்(ஐடிஇ) கூறியது.
இது 14வது பொதுத் தேர்தலில் காலஞ்சென்ற ஹரப்பான் வேட்பாளர் பக்தியார் முகம்மட் நோருக்குக் கிடைத்த 50.76 விழுக்காடு வாக்குகளைவிட கிட்டத்தட்ட 5 விழுக்காடு குறைவாகும்.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 1,142பேரில் 37 விழுக்காட்டினர் பிஎன்னை ஆதரிக்கிறார்கள்.
12 விழுக்காட்டினர் மற்ற வேட்பாளர்களுக்குதான் தங்கள் ஆதரவு என்றனர். ஐந்து விழுக்காட்டினர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இன்று பிற்பகல், ஷா ஆலமில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஐடிஇ துணைத் தலைவர் முகம்மட் ரெட்சுவான் ஒத்மான், “யாருக்கும் தெளிவான வெற்றி கிடையாது” என்றார்.
“மற்றவர்களைவிட ஹரப்பான் சுமார் 10 விழுக்காடு அதிக ஆதரவைப் பெற்றிருந்தாலும் அது இன்னும் வெற்றி எல்லையைத் தாண்டவில்லை.
“மற்றவர்களையும் சுயேச்சை வேட்பாளர்களையும் ஆதரிப்பதாக சொன்னார்களே அவர்கள்தான் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறார்கள்”, என்றார்.
14வது பொதுத் தேர்தலில் நான்குமுனைப் போட்டியில் பாஸ், பிஎன், பிஎஸ்எம் வேட்பாளர்களைத் தோற்கடித்து பக்கத்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்த பக்தியார் காலமானதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பாஸும் அம்னோவும் அதிகாரப்பூர்வமற்ற கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கின்றன.. அதே வேளை பிஎஸ்எம்மும் போட்டியிடுகிறது.