இசி துணைத் தலைவராக அஸ்மி ஷாரோம், பேரரசர் இணக்கம்

தேர்தல் ஆணையத்தின் (இசி) புதியத் துணைத் தலைவராக, மலாயாப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர், டாக்டர் அஸ்மி ஷாரோம்-ஐ நியமிக்க, யாங்டி பெர்த்துவான் அகோங், சுல்தான் அப்துல்லா ரியாதுட்டின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா இணக்கம் தெரிவித்துள்ளார்.

2019, ஜனவரி 1-ம் தேதி முதல், தனது சேவையை முடித்துக்கொண்ட, ஒத்மான் மாஹ்முட்டுக்குப் பதிலாக அஸ்மி பொறுப்பேற்றிருக்கிறார்.

மேலும், வெளியுறவு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ரம்லான் இப்ராஹிம், மனித வளத்துறை அமைச்சின் முன்னாள் தலைமை இயக்குநர், சின் பாய்க் யோங், தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஃபைசால் எஸ் ஹாஜிஸ் மற்றும் பெர்சே 2.0 ஆலோசகர் ஸோய் ரண்டாவா ஆகியோரும் தேர்தல் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நியமனம், இசி உறுப்பினர்களாக அவர்கள் பொறுப்பேற்கும் நாள் தொடங்கி, கூட்டாட்சி அரசியலமைப்பின் 114-வது பிரிவு, விதி (3)-க்கு இணங்க, 66 வயது வரை நீடிக்கும் என அரசாங்கத் தலைமைச் செயலாளர், இஸ்மாயில் பாக்கார் தெரிவித்தார்.

முன்னதாக, இசி துணைத் தலைவர், ஒத்மான் மஹ்மூட்டுடன், மற்ற இசி உறுப்பினர்களான, யூசோப் மன்சோர், அப்துல் அஸிஸ் கலிடின், சுலைமான் நராவி மற்றும் லியோ சோங் சியோங் ஆகியோரும் தங்களின் பணிக்காலத்தைக் குறைத்துகொண்டு, கடந்த ஜனவரி 1-ம் தேதி, அப்பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு உறுப்பினரான, பால சிங்கம் கருப்பையாவும் தனது பணிக்காலத்தை முடித்துகொண்டதாக நம்பப்படுகிறது.