செமிஞ்சே இடைத்தேர்தல் | மலேசியத் தேசியப் பல்கலைகழகத்தின் (யூகேஎம்) முன்னாள் நிர்வாக அதிகாரி, ஜகாரியா ஹனாஃபி, 58, பிஎன் சார்பில் செமிஞ்சே இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்னோ உலு லாங்காட் சமர்ப்பித்த ஆறு பேர் கொண்ட பட்டியலில், உள்ளூர்வாசியான ஜாகரியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிஎன் நடப்புத் தலைவர், முகமட் ஹசான் வேட்பாளரை அறிவித்தபோது, சிலாங்கூர் பாஸ் தலைவர் சலேஹுடின் முக்கியியும் உடன் இருந்தார்.
இதற்கிடையே, உலு லங்காட் பெர்சத்து கட்சியின் பொருளாளாரும், முன்னாள் செமிஞ்சே சட்டமன்ற உறுப்பினரின் மருமகனுமாகிய முகமட் ஐமான், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சற்றுமுன்னர், தாமான் பிலாங்கியில், பெர்சத்து தலைவர் முஹிட்டின் யாசின் இதனை அறிவித்தார்.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில், பிஎன் மற்றும் பாஸ் இரண்டும் தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இம்முறை அந்த இரண்டு கட்சிகளும், எதிர்க்கட்சி சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்தி, தங்கள் ஒத்துழைப்பைத் தொடர முடிவு செய்துள்ளன.
பாரிசான், ஹராப்பானைத் தவிர்த்து, மலேசிய சோசலிசக் கட்சியும் (பி.எஸ்.எம்.) தங்கள் வேட்பாளரை இந்த இடைத் தேர்தலில் களமிறக்கியுள்ளது. பி.எஸ்.எம். சார்பில், 25 வயது இளைஞரான, நிக் அஸிஸ் அஃபீக் அப்துல் போட்டியிடவுள்ளார்.
ஜகாரியா, யூகேஎம்-இல் நிர்வாக அதிகாரியாக 2005 முதல் 2016 வரை பணியாற்றியுள்ளார். 2001-ல், அதேப் பல்கலைக்கழகத்தில், அவர் மேம்பாட்டுத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
முகமட் ஐமான், 30, ஷா ஆலம் யூ.ஐ.தி.எம்.-இல் மின் பொறியியல் துறையில் இளங்கலை முடித்தவர். தற்போது அவர், அதேத் துறையில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.