‘நிலப்பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட்டால், இடைத்தேர்தலில் ஹராப்பானைப் புறக்கணிப்போம்’

செமிஞ்சே இடைத்தேர்தல் | தேசிய வகை செமிஞ்சே தோட்டத் தமிழ்ப்பள்ளி தரப்பினர், பள்ளி நிலப்பிரச்சனைக்குச் சுமூகமான தீர்வு காணப்படாவிட்டால், 1,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானைப் புறக்கணிப்பர் என்று கூறியுள்ளனர்.

பள்ளி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த (ஜிஎல்சி) நிறுவனமான சைம் டர்பி இடையேயான நிலப்பிரச்சனையைக் கையாள்வதில், சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒருதலை பட்சமாக நடந்துகொள்வதாக, பள்ளி மேலாண்மை வாரியத்தின் தலைவர், டாக்டர் கே சிவகுமரன் கூறினார்.

“அன்று தொட்டு, நாங்கள் ஹராப்பானை ஆதரித்து வருகிறோம். ஆனால், நிலப் பிரச்சனையைத் தீர்ப்பதில், மாநில அரசாங்கம் மௌனம் காப்பது எங்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது,” என்றார் அவர்.

1948-ல், தோட்ட நிலத்தில் கட்டப்பட்ட இத்தமிழ்ப்பள்ளி, சைம் டர்பி நிறுவனத்திடம் விற்கப்பட்டது. கடந்த 2010-ல், பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், 3.8 ஏக்கர் மட்டுமே கொடுக்க முன்வந்ததால் இந்தச் சர்ச்சை ஏற்பட்டது.

“சிலாங்கூர் நகர மற்றும் கிராமத் திட்டமிடல் வழிகாட்டல்கள், தீபகற்பத் திட்டமிடல் மற்றும் கிராம வழிகாட்டல்கள் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சின் வழிகாட்டுதல்களில், முன்னெடுக்கப்படும் மேம்பாட்டுத் திட்டங்களில், ஆரம்பப்பள்ளிக்குக் குறைந்தபட்சம் 6 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

“எனவே, நாங்கள் இதனை ஏற்க மறுக்கிறோம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஜிஎல்சி நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய மாநில அரசாங்கம், 3.8 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொள்ள பள்ளியை நிர்பந்திக்கின்றனர்.

“கேள்வி என்னவென்றால், மாநில அரசு ஏன் ஜிஎல்சி நிறுவனத்திற்குப் பயப்படுகிறது, அரசு வழிகாட்டுதல்களை மீறும் அளவிற்கு?” என மலேசியகினியிடம் அவர் தெரிவித்தார்.

அப்பள்ளியில் தற்போது 450 மாணவர்கள் படிப்பதாக, சிவக்குமரன் தெரிவித்தார்.

“எனவே, நீங்களே கணக்கெடுத்து கொள்ளுங்கள், இங்கு எத்தனை வாக்குகள் இருக்கிறது என்று. முன்னாள் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் எனக் கணக்கெடுத்தால், 1,000-த்தை தாண்டும். இப்போது அது மந்திரி பெசாரின் கையில் உள்ளது,” என, மந்திரி பெசாரை இப்பிரச்சனையில் தலையிட்டு, நல்லதொரு தீர்வைக் கொடுக்கும்படி சிவக்குமரன் கேட்டுக்கொண்டார்.

‘நல்லதொரு தீர்வைத் தேடுகிறோம்’

இதற்கிடையே, மலேசியாகினி தொடர்புகொண்ட போது, செமிஞ்சே தமிழ்ப்பள்ளி நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையில், தனது தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக சைம் டர்பி நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலப் பிரச்சனையால், செமிஞ்சே தோட்ட முன்னாள் தொழிலாளர்களுக்குக் குறைந்த விலை வீடு கட்டும் எங்களின் திட்டம் பாதிப்படைந்துள்ளது என்று ஓர் ஊடக அறிக்கையில் சைம் டர்பி தெரிவித்துள்ளது.

“தொடக்கத்தில், 2013-ல் பள்ளிக்கு 3.07 ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. பிறகு நிலத்தின் அளவை அதிகரிக்கச் சொல்லி கேட்டுகொண்டதால், 2015-ல் 3.81 ஏக்கரைக் கொடுக்க முடிவு செய்தோம்.

“இது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டது.

“எனினும், (தற்போது) அப்பள்ளி ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது,” என்று அந்த நிறுவனம் கூறியது.

இருப்பினும், இப்பிரச்சனைக்குச் சுமூகமான தீர்வுகாண, அனைத்து தரப்பினருடனும் கலந்துபேச தயாராக உள்ளதாக சைம் டர்பி நிறுவனம் கூறியுள்ளது.