RM1.5 மில்லியன் இலஞ்சம், கருவூலத்துறை அதிகாரியின் செயலாளரை எம்.ஏ.சி.சி. கைது செய்தது

கருவூலத்துறை மூத்த அதிகாரி ஒருவரின் அலுவலகச் செயலாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது. RM1.5 மில்லியன் இலஞ்சம் கோரிய வழக்கு விசாரணையில் உதவுவதற்காக, 5 நாட்களுக்கு அவர் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

நீதிமன்றத்தில், எம்.ஏ.சி.சி.-யின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, நீதிபதி அஹ்மாட் அஃபிக் ஹசான், அந்தப் பெண்ணுக்கு எதிராக, பிப்ரவரி 19 வரை, தடுப்புக்காவல் உத்தரவுக் கடிதத்தை வெளியிட்டார்

இன்று காலை 9.05 மணியளவில், நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட 39 வயது கொண்ட அந்தப் பெண்மணி, ஆரஞ்சு நிற தடுப்புக்காவல் உடை அணிந்து, கைகளில் விலங்கிடப்பட்டிருந்தார்.

நேற்று மாலை 6.56 மணியளவில், புத்ராஜெயாவிலுள்ள அலுவலகத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்தாண்டு இறுதியில், ஹாங்காங்கில் அரசுக்குச் சொந்தமான நில விற்பனை ஒப்பந்தத்தில், தனது தலைவர் (கருவூலத் துறையின் துணைத் தலைமைச் செயலாளர்) ஒப்புதல் கையெழுத்திட, சொத்துடைமை நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம், RM1.5 மில்லியன் இலஞ்சம் கேட்டதாக நம்பப்படுகிறது.

அந்த இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை, அவர் பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு, மேலும் சிலர் அழைக்கப்படும் சாத்தியம் உள்ளதாக எம்.ஏ.சி.சி. கூறியுள்ளது.

எம்.ஏ.சி.சி. சட்டம் 2009, பிரிவு 16(a)(A)-இன் கீழ், இவ்வழக்கு விசாரணை செய்யப்படுகிறது.

  • பெர்னாமா