செமினி இடைத்தேர்தல் | இன்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) செமினி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, 24 மணி நேர இயக்க அறையை (bilik gerakan) தொடங்கியுள்ளது.
இடைத்தேர்தலின் போது நடக்கும் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களைப், பொது மக்கள் உடனுக்குடன் புகார் செய்ய ஏதுவாக இது அமையும் என எம்.ஏ.சி.சி. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த இயக்க அறை, ஜாலான் செம்பாக்கா பூத்தே, மெனாரா எம்பிகேஜெ-வில், 24 மணி நேரமும் செயல்படும்.
இதுதவிர்த்து, பொது மக்கள் ‘[email protected]’ என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது நேரடியாக தொலைபேசி வழியும் புகார் செய்யலாம் என எம்.ஏ.சி.சி. கூறியுள்ளது.
எம்.ஏ.சி.சி. சட்டம் 2009 மற்றும் தேர்தல் ஆணையச் சட்டம் 1954 (திருத்தம் 2012) ஆகியவற்றிற்கு ஏற்ப, தேர்தல் சட்டங்களையும் விதிகளையும் மீறி நடக்க வேண்டாம் என அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எம்.ஏ.சி.சி. நினைவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ‘பெர்சே’ தேர்தல் கண்காணிப்புக் குழு, கடந்த மாதம் நடந்த கேமரன் இடைத் தேர்தலில், 23 புகார்களைப் பதிவு செய்துள்ளது. 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின் நடந்த இடைத் தேர்தல்களில், ஆக அதிகமான புகார்களைப் பெற்ற இடைத்தேர்தல் இதுவாகும்.
அவற்றுள், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான 14 புகார்கள் பாரிசான் நேசனல் மீதும், ‘வாக்குகளை வாங்கினர்’ எனும் 5 புகார்கள் பக்காத்தான் ஹராப்பான் மீதும் பதிவானது.