ஆடிப் புலன்விசாரணை | தீயணைப்பு வீரர் ஒருவர், மயக்கமடைந்த நிலையில், காரின் மீது சாய்ந்திருந்தார், அவரைச் சுற்றி ஏறக்குறைய 12 பேர் நின்றிருந்தனர்.
“அடிக்காதே!” என சிலர் தமிழில் கத்தினர். “தீயணைப்பு வீரர்களையும் தாக்குவீர்களா? என்று இன்னொருவர் கூறினார்.
சீஃபீல்ட் கோயில் கலவரத்தின் போது, இப்படியான உரையாடல்களைக் கேட்டதாக, தீயணைப்பு வீரர் ஆடிப் வழக்கு விசாரணையின் எட்டாவது சாட்சி, ஆர் சுரேஸ், 33, தெரிவித்தார்.
“நான் அங்கு வந்து சேர்ந்தபோது, சிலர் என்னைக் கீழே தள்ளிவிட்டனர், நான் தீயணைப்பு வீரர் ஒருவர் மீது விழுந்தேன். எனது வலது தோள்பட்டையில் யாரோ என்னைத் தாக்கினர். பிறகுதான் தெரியவந்தது, அவர் ஆடிப் என்று. நான் விழுந்த நிலையில் இருந்து, தாக்கியது யார் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. தோளில் விழுந்த அடி, வலியைக் கொடுத்தது,” என சுரேஸ் சொன்னார்.
தீயணைப்பு வீரரைத் தாக்கியது யாரென்று பார்க்க முடியவில்லை என்று கூறிய சுரேஸ், சிறிது நேரம் கழித்து, சம்பவம் நடந்த இடத்தை அருகில் சென்று பார்த்ததாகக் கூறினார்.
ஆனால், நீண்ட ஆயுதம் ஏந்திய ஒரு நபருடன், சிலர் தீயணைப்பு வண்டியை நோக்கி சென்றதைப் பார்த்ததாகவும், பிறகு அவர்கள் அவ்வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.