சபாவின் 5 எம்பிக்கள், 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைய விண்ணப்பம்

கடந்தாண்டு இறுதியில், அம்னோவைவிட்டு விலகிய சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்மர் பெர்சத்துவில் இணைய, விண்ணப்பப்பாரங்களைக் கொடுத்துள்ளனர்.

பிரதமரும் பெர்சத்துவின் தலைவருமான டாக்டர் மகாதிர், பெர்சத்து சபாவில் கால் பதிக்க உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கட்சியில் சேருவதற்கான அவர்களின் நோக்கம் பிரகாசமாகி வருகிறது என்று முன்னாள் சபா அம்னோ தலைவரான, ஹஜிஜி நோர் கூறியதாக, பெரித்தா ஹரியான் ஆன்லைன் செய்திகள் மேற்கோள் காட்டியுள்ளது.

“டாக்டர் மகாதிரின் இந்த முடிவுக்கு நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். தற்போது, ஏறக்குறைய 100,000 உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைய விண்ணப்பித்துள்ளனர். தொடக்கத்தில் இருந்தே நாங்கள் பெர்சத்துவில் இணையத்தான் விரும்பினோம்,” என்று அவர் மேலும் சொன்னார்.

முன்னதாக இன்று, சபாவில் பெர்சத்து நுழைவதற்குக் காரணம், மாநிலத் தலைவர், ஷாஃபி அப்டால் நிர்வாகத்தை எதிர்ப்பதற்காக அல்ல, மாறாக, அவர் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த என்று மகாதிர் கூறியிருந்தார்.