வரலாறு படைத்த செமினி வேட்பாளர் நியமனம்

செமினி இடைத்தேர்தல் | இன்று, செமினி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி மிகவும் சுமூகமான முறையில், விரைவாக நிறைவுபெற்று, வரலாறு படைத்ததாக தேர்தல் ஆணையர் அஸார் அஸிஸா ஹரூண் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் நேரம் நிறைவடைந்த அடுத்த 25 நிமிடங்களில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

காலை 7.15 மணிக்கெல்லாம் பிஎன் ஆதரவாளர்கள் அவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் கூடத் தொடங்கினர். பிஎன் வேட்பாளர் ஜக்காரியா ஹனாஃபி, நீல நிற மலாய் உடையணிந்து, 7.19 மணியளவில் அங்கு வந்து சேர்ந்தார். அவருடன் பிஎன் ஆதரவாளர்கள் ‘செல்ஃபி’ எடுத்துகொண்டனர்.

காலை மணி 7.30 அளவில், பக்காத்தான் ஹராப்பான் தரப்பினர் வந்து சேர்ந்தனர்.

அமானா தலைவர் முகமட் சாபு, பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, டிஏபி துணைத் தலைவர் கோபிந் சிங் டியோ ஆகியோர் புடைசூழ, சிவப்பு வண்ண மலாய் உடையணிந்து, முகமட் ஐமான், 30, வேட்புமனு தாக்கல் இடத்தை நோக்கி வந்தார்.

காலை மணி 8 அளவில், மலேசிய சோசலிசக் கட்சியைச் (பி.எஸ்.எம்.) சார்ந்த சுமார் 50 ஆதரவாளர்கள், அவர்களின் வேட்பாளர், நிக் அஸிஸ் அஃபிக் அப்துல் உடன் அங்கு வந்தனர்.

கட்சியின் தேசியத் தலைவர், டாக்டர் நசீர் ஹஷிம், தலைமைச் செயலாளர் ஆ சிவராஜன் ஆகியோருடன் சுவாராம் ஆலோசகர் டாக்டர் குவா கியா சூங்-கும், நிக் அஸிஸ்-க்கு ஆதரவு தெரிவிக்க டேவான் ஶ்ரீ செம்பாக்கா வந்திருந்தார்.

காலை மணி 8.07 அளவில், பாஸ் கட்சி சார்ந்தவர்கள் அங்கு வந்தனர். அவர்களைப் பிஎன் ஆதரவாளர்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.

மேலும், இன்றைய வேட்புமனு தாக்கலைக் காண, பிஎன் தலைவர்கள் கைரி ஜமாலுட்டின், முகமட் காலிட் நோர்டின், ஜம்ரி அப்துல் காடிர், அஹ்மாட் மஸ்லான் மற்றும் அம்னோ நடப்புத் தலைவர் முகமட் ஹசான் ஆகியோரும் வந்திருந்தனர்.

பிஎன், பாஸ் ஆதரவாளர்கள் சுமார் 1,000 பேருடன், ஜகாரியா டேவான் ஶ்ரீ செம்பாக்கா நோக்கிச் சென்றார். அதேசமயம், ஹராப்பான் ஆதரவாளர்கள் ஏறக்குறைய 500 பேர், பெர்சத்து தலைவர் முஹிட்டின் யாசின் உடன் அணிவகுத்து அங்கு வந்தனர்.

காலை பசியாரலை முடித்து, 8.40 மணியளவில், பி.எஸ்.எம். ஆதரவாளர்கள் ‘ஹிடுப் சோசலிசம்’ மற்றும் ‘புரோ தானி’ ஆகியப் பாடல்களைப் பாடிய வண்ணம் அணிவகுத்து வந்தனர்.

இறுதியாக, சுயேட்சை வேட்பாளர் குவான் ச்சீ ஹெங், தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் அங்கு வந்தார். ‘அங்கிள் கெந்தாங்’ என்று வட்டார மக்களிடையே அறிமுகமான அவர், காலை மணி 9-க்கு அங்கு வந்தார்.

நேற்றுவரை, 13 வேட்புமனு தாக்கல் படிவங்கள் விற்பனையாகிய போதும், 4 வேட்பாளர்கள் மட்டுமே இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.

இதற்கிடையில், தேர்தல் மேலாளர், முகமட் சயுத்தி பாக்கார் வேட்பாளர் பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதாக அறிவித்தார். காலை மணி 10 அளவில், வேட்பாளர் பதிவு நேரம் அதிகார்ப்பூர்வமாக முடிவடைந்தது.

இன்று, வேட்புமனு தாக்கல் சுமூகமாக நடப்பதை உறுதிசெய்ய, 733 காவல்துறை அதுகாரிகளும் உறுப்பினர்களும், பணியில் அமர்த்தப்பட்டதாக, காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர், ஏசிபி அஹ்மட் ட்ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், 4 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகத் தேர்தல் அதிகாரி, முகமட் சயூத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

4 முனைப் போட்டியில், ஜக்காரியா ஹனாஃபி (பிஎன்), முகமட் ஐமான் ஜினாலி (ஹராப்பான்), நிக் அஸிஸ் அஃபிக் அப்துல் (பி.எஸ்.எம்.) மற்றும் குவான் ச்சீ ஹேங் (சுயேட்சை) ஆகியோரின் வேட்புமனு தாக்கல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இம்முறை, 70 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்க வருவார்கள் என எதிர்பார்ப்பதாக, அஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.